தமிழக அரசு பஸ்களில் அதிக கட்டணம் மூலம் ரூ.350 கோடி வசூல்- தகவல் அறியும் சட்டம் மூலம் கண்டுபிடிப்பு

262 0

தமிழக அரசுப் பேருந்துகளில் சாதாரண கட்டணங்களுக்கு பதிலாக எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலித்து ரூ.350 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றது. அரசு போக்குவரத்து கழகங்கள் கடந்த சில வருடங்களாக தொடர் நஷ்டத்தில் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. தொடர் டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை அதிகரிப்பு, சம்பள உயர்வு போன்ற காரணங்களால் இழப்பு அதிகரித்து வருகிறது.

ஆனால் பஸ் கட்டணம் மட்டும் உயர்த்தப்படாமல் இருந்துவந்ததால் போக்குவரத்து கழகங்கள் பெரும் கடன் சுமைக்கு தள்ளப்பட்டன. ஊழியர்களின் வைப்பு நிதி, பென்சன் போன்றவற்றை எடுத்து செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஒவ்வொரு போக்குவரத்து கழகமும் மாதம் மாதம் சம்பளம் கொடுக்க முடியாமல் தடுமாறுகின்ற நிலையும் உருவாகியுள்ளது.

போக்குவரத்து கழகங்கள் இந்த பரிதாப நிலைக்கு போனதால் பராமரிப்பு செலவுகளை மேற்கொள்வதற்காக ஒரு சில முடிவுகளை அதிகாரிகள் எடுத்து செயல்படுத்தினர். பஸ் கட்டணம் 4 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது திடீர் என்று உயர்த்தப்பட்டு இருக்கிறது.

அது ஒரு சில போக்குவரத்து கழகங்கள் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்துள்ளனர். சாதாரண பஸ் சேவைக்கு ‘எக்ஸ்பிரஸ் கட்டணம்’ என்ற பெயரில் வசூல் செய்யப்பட்டது தகவல் உரிமை சட்டத்தின்மூலம் தெரியவந்துள்ளது. கோவை போக்குவரத்து கழகமும், சென்னை மாநகர போக்குவரத்து கழகமும் சட்டத்தை மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு இருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. 2012 முதல் 2017 வரையில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் 1000க்கும் மேற்பட்ட சாதாரண பஸ்களில் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலித்துள்ளனர். அதிக கட்டணம் மூலம் ரூ.350 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என தகவல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவையை சேர்ந்த கே.கதிர்தியான் என்ற பயணி வட்டார போக்குவரத்து கழக அலுவலகத்திலும் தகவல் உரிமை அலுவலகத்திலும் புகார் கொடுத்தார். கோவை ரெயில் நிலையத்தில் இருந்து வட வள்ளிக்கு சாதாரண கட்டணத்தில் அரசு பஸ்களுக்கு வட்டார போக்குவரத்து கழகம் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 5 ரூபாய் சாதாரண கட்டணத்திற்கு பதிலாக 8 ரூபாய் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாரில் தெரிவித்து இருந்தார்.

அவருடைய புகாருக்கு தகவல் உரிமை ஆணையம் அளித்துள்ள பதிலில், சட்டத்திற்கு விரோதமாக போக்குவரத்து கழக அதிகாரிகள் அதிக கட்டணம் வசூலித்து இருப்பது தெரியவந்தது. கோவையில் 1000க்கும் மேற்பட்ட பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்து இருப்பதாகவும், ஒவ்வொரு விதி மீறிய செயலுக்கும் அபராதமாக ரூ.500 முதல் 9 ஆயிரம் வரை விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற விதிமீறல் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திலும் நடந்துள்ளது. 110 மாநகர பஸ்கள் நீண்ட தூரத்திற்கு மாற்றி இயக்கப்பட்டுள்ள விவரம் அரசின் ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது. எம்.1 ஏ என்ற மாநகர பஸ் தியாகராய நகர் மற்றும் கேளம்பாக்கம் இடையே இயக்கப்பட வேண்டும். ஆனால் இந்த பஸ் காஞ்சீபுரம் வரை இயக்கப்படுகிறது. மேலும் வடபழனி, பிராட்வே, அடையார் மற்றும் தாம்பரம், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு, சுங்குவார்சத்திரம், மகேந்திராசிட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகின்ற தகவல் அரசின் ஆவணங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு மோட்டார் வாகன சட்ட விதிகள் படி முதல் தவறாக இருந்தால் ரூ.2500 அபராதமும், தொடர்ந்து தவறு செய்தால் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்பட வேண்டும். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 2011-முதல் மோட்டார் வாகன விதிகளை மீறி இவ்வாறு பேருந்துகளை இயக்கி உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, காலை மற்றும் மாலை ‘‘பீக் அவர்சில்’’ மட்டுமே கூடுதலாக பஸ் தேவை ஏற்பட்டதால் இந்த வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டன என்றனர்.

Leave a comment