நல்லிணக்க பிரசாரம் தமிழர்களுக்கு மாத்திரம் அறிவுரை கூறுவதாக இருக்கக் கூடாது!

224 0

நல்லிணக்க தமிழ் தொலைக்காட்சி, தெற்கில் இருந்து வடக்கிற்கு மாத்திரம் நல்லிணக்க பிரச்சாரங்களை கொண்டு செல்லும் ஒருவழி பாதை ஊடகமாக இருக்கக் கூடாது. இருக்கவும் முடியாதென முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தால் ஆரம்பிக்கப்படும் நேத்ரா நல்லிணக்க தமிழ் தொலைக்காட்சியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து  வைக்கும் நிகழ்வு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், அமைச்சர்கள் மங்கள சமரவீர, மனோ கணேசன், பெளசி, சுமந்திரன் எம்பி,  ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் ரவி ஜெயவர்தன ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர் மனோகணேசன்,

இந்த நல்லிணக்க அலைவரிசையை பயன்படுத்தி தெற்கில் இருந்து வடக்குக்கு மட்டும் உங்கள் நல்லிணக்க செய்திகளை அனுப்பாதீர்கள். அங்கிருந்தும் தமிழ் மக்களின் துயரங்களை, துன்பங்களை, அபிலாசைகளை ஏன் கோபங்களை கூட  செய்திகளாக  இங்கு கொண்டு வந்து சிங்களத்தில் மொழி பெயர்த்து சிங்கள மக்களுக்கும் சொல்லுங்கள். அதை ரூபவாஹினி சிங்கள அலைவரிசையில் நேரம் எடுத்து காண்பியுங்கள். இது அரச ஊடகம். இலாபம் சம்பாதிப்பதை மாத்திரம் நோக்காகக் கொண்டு நீங்கள் செயல்பட முடியாது. அதை இங்கே இந்நிகழ்வில் கலந்துக்கொண்டிருக்கும் நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர் என் நண்பர் மங்கள சமரவீர கவனத்தில் கொள்வார் என நம்புகிறேன்.

இது இன்னமும் ஒரு முழுமையான தொலைக்காட்சி அலைவரிசை அல்ல என அறிகிறேன். இது இன்னும் நிறைய தொழிநுட்பரீதியாக வளம் பெற வேண்டும். நாடு முழுக்க ஒளிபரப்பாக வேண்டும். இந்நாட்டில் தமிழ் பேசும் மக்களின் சனத்தொகை ஐம்பது இலட்சமாகும்.

தமிழர் வடக்கில் மட்டும் வாழவில்லை. கிழக்கில், மலையகத்தில், இங்கே மேற்கிலும்  வாழ்கிறார்கள். தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் சனத்தொகையில் அறுபது விகித விழுக்காட்டினரும், தமிழர்களில் ஐம்பது விகித  விழுக்காட்டினரும்  வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழ்கிறார்கள்.

வடக்கில் யுத்த துன்ப வடுக்கள்  அதிகம். ஆகவே வடக்குக்குதான் நல்லிணக்க அலைவரிசை தொடர்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.  வடக்கின்  துன்ப வரலாற்றை இங்கே கொண்டு வந்து சிங்கள மக்களுக்கு சொல்லுங்கள். தமிழ் மக்களுக்கு மாத்திரம் அறிவுரை கூறும் ஒருவழிப்பாதை தொலைக்காட்சி அலைவரிசையாக இது இருக்க கூடாது. வடக்கில் ஒரு நிகழ்ச்சி தயாரிப்பு கலையகம் கட்டப்படுவது நல்ல விடயம். அடுத்த கலையகத்தை நுவரேலியா, பதுளை பகுதியில் அமையுங்கள். அது மலைநாட்டு மற்றும்  கிழக்கு மாகாண கலைஞர்களுக்கு பயன்தரும்.

இதற்கு முன் நேத்ரா அலைவரிசையில் கிரிக்கெட் விளையாட்டு வர்ணனைகளை காட்டிக்கொண்டு இருந்தீர்கள். தமிழ் செய்திகளை கூட நிறுத்தி விட்டு  விளையாட்டு வர்ணனைகளை காட்டியமை பற்றி இங்கே குறை கூறப்பட்டது. அது தவறுதான். அது இனி இந்த அலைவரிசையில் நிகழக்கூடாது. அதற்கு இன்னொரு  பக்கமும் இருக்கிறது.

இந்நாட்டில் அரசியல்வாதிகள், மத தலைவர்கள் தோற்றுப்போன வேளைகளில் கூட இந்நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவதில் கிரிக்கட் பாரிய பங்காற்றியுள்ளது என்பதை நாம் மறக்க முடியாது.  என்னை பொறுத்தவரையில், கிரிக்கட் இலங்கையின் ஐந்தாவது மதம். ஆகவே அந்த கிரிக்கட் கொண்டு வந்து விட்ட  இடத்தில் இருந்து தேசிய நல்லிணக்கத்தை இந்த நேத்ரா நல்லிணக்க தமிழ் தொலைக்காட்சி மூலம் மென்மேலும் கட்டி எழுப்ப  ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் ரவி ஜெயவர்த்தன முயல வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment