புதிய கட்சி தொடங்கிய கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை!

217 0

புதிய கட்சியின் அறிவிப்பு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்து கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ளனர். கமல்ஹாசன் தமிழக அரசுக்கு எதிராக சில மாதங்களாக டுவிட்டரில் கடும் விமர்சனம் செய்து வந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர்களும் பதில் அளித்தனர்.

இந்த நிலையில் கமல்ஹாசன் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக அறிவித்தார். அதன்படி நேற்று (21-ந்தேதி) மதுரை ஒத்தக்கடையில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் “மக்கள் நீதி மய்யம்” என்ற புதிய கட்சியை தொடங்கினார். கட்சி கொடியையும் அறிமுகப்படுத்திய கமல்ஹாசன் அந்த கொடியின் அம்சங்கள் குறித்தும் விளக்கினார்.

கட்சி கொடி வெள்ளை நிறத்தில் இணைந்த கரங்களுடன் அமைந்துள்ளது. இந்த கொடிக்கான விளக்கத்தை கமல்ஹாசன் கூறுகையில், 6 கைகள் 6 மாநிலங்களை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்களின் நீதியை மையமாக வைத்து தொடங்கப்பட்டுள்ள கட்சி என்பதால் நடுவில் நட்சத்திரம் மையமாக இருக்கிறது. நீதிக்கட்சி போன்ற மூத்த கட்சிகளின் அறிவுரையை போன்று கொடியை உருவாக்கியுள்ளோம் என்றார்.

கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அகில இந்திய பொறுப்பாளராக தங்கவேலு நியமிக்கப்பட்டார். மேலும் கட்சியின் உயர்மட்ட குழுவில் பேராசிரியர் க.ஞான சம்பந்தன், நடிகை ஸ்ரீபிரியா, கமிலா நாசர், ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. மவுரியா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

கட்சியின் தொடக்க விழா முடிந்ததும் மதுரை காளவாசலில் உள்ள ஓட்டலுக்கு வந்த கமல்ஹாசன் சிறிது நேரம் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர் ஓய்வு எடுத்தார். இன்று காலை புதிய கட்சியின் அறிவிப்பு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்து உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை அழைத்து பேசினார்.

அப்போது மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கட்சியின் கொடி-கொள்கைகளை பொதுமக்கள் மத்தியில் எந்தெந்த வகைகளில் எடுத்துச் செல்வது என்பது குறித்தும் கமல்ஹாசன் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். நிர்வாகிகளும் கட்சி வளர்ச்சி குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Leave a comment