உணவு ஒவ்வாமையால் ஒரே குடும்பத்தின் 6 பேர் வைத்தியசாலையில்

222 0

காத்தான்குடியில் உணவு ஒவ்வாமையினால் திடீர் சுகயீனமடைந்த இரண்டு சிறுவர்கள் இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று (20) இரவு திடீர் சுகயீனமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

புதிய காத்தான்குடி மீன் பிடி இலாகா வீதி, பறக்கத் ஒழுங்கையில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரே இந்த திடீர் சுகயீனத்துக்குள்ளாகியுள்ளனர்.

நேற்று (20) பகல் மீன் மற்றும் மீனின் சினை என்பவற்றை சமைத்து உணவு உட்கொண்ட இக் குடும்பத்தினருக்கு மாலை வேளையில் திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது இதனையடுத்து இவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

ஏ.எம்.பௌசர் (47) அவரது மனைவி சபியா (36) அவரது பிள்ளைகளான சலாஹ் (10), சைக் (12) மற்றும் அவரது மாமியாரான நுஸைபா (57) அவரது மைத்துனன் சஸ்மி (27) ஆகியோரே இவ்வாறு சுகயீனமுற்றுள்ளனர்.

இவர்களுக்கு உடல் பலவீனம் ஏற்பட்டதுடன் விறைப்பு தன்மை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார்  விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, உரிய சிகிச்சை வழங்கப்பட்டு பெற்று வருவதாக காத்தான்குடி சுகாதார வைத்தியர் டாக்டர் ஏ.எல். நசீர்தீன் தெரிவித்தார்.

Leave a comment