தமிழக அரசு கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

263 0

தி.மு.க. அறிவித்த அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், தமிழக அரசு கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி நதிநீர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பை தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழக அரசின் சார்பில் 22-2-2018 அன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருப்பதை தி.மு.க. சார்பில் வரவேற்கிறேன்.

தமிழக அரசே கூட்டத்தை நடத்துவதால், தி.மு.க. சார்பில் 23-2-2018 அன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.

அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்று காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தெரிவிக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக விவசாயிகளின் கருத்துகள், ஆலோசனைகள் மிக முக்கியமாக கேட்கப்பட வேண்டிய தேவையிருப்பதால், அனைத்துக்கட்சிகள் மட்டுமின்றி தமிழக விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேச வேண்டும் என்று தீர்ப்பு வெளிவந்தவுடன் தி.மு.க. சார்பில் கோரிக்கை விடுத்திருந்தேன்.

ஆகவே, காவிரி பிரச்சினையில் அனைத்துக்கட்சிகள் மற்றும் விவசாயிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் பொருட்டு, அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தமிழக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment