பிரதமர் பதவி விலகாவிடின், அமைச்சரவை கலைக்கப்படும்?

199 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகாவிடின் தற்பொழுதுள்ள  அமைச்சரவையை  உடன்  கலைத்துவிடுவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 46 (2) (ஆ) உறுப்புரையில் பிரதமர் தனது பதவியை வகிப்பது அமைச்சரவை நடைமுறையில் உள்ளவரைதான் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, அமைச்சரவையை கலைத்தால், ரணில் விக்ரமசிங்கவின் பிரதமர் பதவியும் செல்லுபடியற்றதாகும் எனவும் சிரேஷ்ட அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்பொழுதுள்ள தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்துள்ளதுடன், அது இதுவரையில் புதுப்பிக்கப்படாதுள்ளது.

அத்துடன், தற்பொழுதுள்ள அமைச்சரவை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படியே அமைக்கப்பட்டுள்ளது. 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி தேசிய அரசாங்கமொன்றில் இருக்க வேண்டிய அமைச்சர்களின் எண்ணிக்கை, இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை என்பன குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்படாமையினால், தற்போதுள்ள அமைச்சரவையும் சட்ட ரீதியானதல்ல என அவர் தெரிவித்துள்ளார். இதனால், அமைச்சரவையும் ஏற்கனவே கலைக்கப்பட்டதாகவே கருதப்படுகின்றது எனவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் சகோதர தேசிய வார இதழொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment