தமிழகத்திற்கு காவிரி நீர் அளவை குறைத்தது உச்சநீதிமன்றம் – 177.25 டி.எம்.சி. ஒதுக்க உத்தரவு

220 0

காவிரி வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய தண்ணீர் அளவை விட குறைத்து, 177.25 டிஎம்சி தண்ணீர் ஒதுக்க உத்தரவிட்டுள்ளது. 

காவிரி பிரச்னை, தமிழ்நாடு-கர்நாடகா மாநிலங்கள் இடையே நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இது தொடர்பாக வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம், முதலில் ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. பின்னர், 2007-ம் ஆண்டு நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை வெளியிட்டது. அதில், அதில் தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த இறுதி தீர்ப்பு சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

ஆனால், காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட 192 டிஎம்சி தண்ணீர் போதாது என்றும், கூடுதலாக தண்ணீர் திறந்து விட உத்தரவிட வேண்டும் என்றும் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதேபோல் கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களும் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியே மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன.

இந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணை தலைமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவாராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி தொடங்கியது.

விசாரணையின்போது தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் தங்கள் மாநில நலன்கள் மற்றும் உரிமைகளை முன்வைத்து வாதிட்டனர். புதுச்சேரி அரசும் தங்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என வாதிட்டது. இறுதிக்கட்ட வாதங்கள் செப்டம்பர் 20-ம் தேதி முடிவடைந்த பின்னர், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வழக்கு விசாரணையின் போது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி நீதிபதிகள் பல்வேறு இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்தனர். ஆனாலும், கர்நாடக அரசு அதனை கண்டுகொள்ளவில்லை. நடுவர் மன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். ஆனால், மத்திய அரசு அந்த தீர்ப்பை உதாசீனப்படுத்தியதோடு, நடுவர் மன்ற தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு கட்டுப்பட்டது, நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என வாதிட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், காவிரி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி வழக்கில் ஆஜராகி வந்த அனைத்து தரப்பு வழக்கறிஞர்களும் உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தனர்.

அப்போது காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமை இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாட்டிற்கு 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டனர். நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் அதைவிட 14.75 டிஎம்சி குறைத்து தற்போது உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் 20 டிஎம்சி நிலத்தடி நீர் உள்ளது என்று கூறிய நீதிபதிகள், கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி காவிரிநீர் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.  கேரளா மற்றும் புதுச்சேரிக்கு நதிநீர் பங்கீட்டில் மாற்றம் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு தமிழக  விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தீர்ப்பு வெளியாவதையொட்டி இரு மாநிலங்களிலும் வன்முறைப் போராட்டங்களைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கர்நாடகத்திற்கு செல்லும் தமிழக பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.

Leave a comment