காவிரி வழக்குகள் அனைத்தும் முடித்து வைப்பு – யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது

214 0

காவிரி நதிநீர் பகிர்வு விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படுவதாகவும், தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவிரி நதி நீரை பகிர்ந்துகொள்வது தொடர்பாக நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பினை எதிர்த்து தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கின் இறுதிக்கட்ட வாதங்கள் முடிவடைந்து 150 நாட்களுக்குப் பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமை இல்லை என்று கூறிய நீதிபதிகள், தமிழ்நாட்டிற்கு 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டனர். நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் அதைவிட 14.75 டிஎம்சி குறைத்து தற்போது உத்தரவிட்டுள்ளனர். அதேசமயம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி காவிரிநீர் அளிக்க உத்தரவிட்டுள்ளனர். பெங்களூர் குடிநீர் தேவைக்காக காவிரி நீரில் 4.75 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் புதுவைக்கான நீர் அளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இவ்வாறு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படுவதாகவும், இந்த தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் தெரிவித்தனர். தீர்ப்பாயம் அளித்த உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிட்டனர்.

தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது 15 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என்றும், இதனை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment