நாடளாவிய ரீதியில் இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலானது பிரதான அரசியல் கட்சிகளிடையே மிகப்பெரிய ஒரு பலப்பரீட்சையாக அமைந்திருக்கின்றது. தென்னிலங்கை, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்துப்பகுதிகளிலும் போட்டியிடுகின்ற பிரதான கட்சிகள் ஏட்டிக்குப்போட்டியான பிரசாரப்பணிகளை முன்னெடுத்து இன்று மக்களின் தீர்ப்பை எதிர்பார்த்து பலப்பரீட்சையில் இறங்கியுள்ளன.
இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலானது மும்முனை போட்டி களமாக உருவெடுத்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையே இம்முறை தேர்தலில் மும்முனைப்போட்டி நிலவுகிறது.
இந்த மூன்று பிரதான கட்சிகளும் கடந்த ஒன்றரை மாத காலமாக தீவிர பிரசார செயற்பாட்டில் ஈடுபட்டதுடன் தமக்கு அதிகாரத்தைப் பெற்றுத்தருமாறு கோரியிருந்தன. அத்துடன் இந்த மூன்று பிரதான கட்சிகளுக்கும் கடும் சவாலாக மக்கள் விடுதலை முன்னணியும் பிரசாரப் பணியில் ஈடுபட்டு வந்தது. அதன்படி இன்றைய தேர்தலானது பிரதான கட்சிகளிடையே மிகப்பெரிய பலப்பரீட்சையாக அமையவிருக்கிறது.
வடக்கு
இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வடக்கிலும் பல்வேறு கட்சிகளிடையே பாரிய போட்டி நிலவுகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி , தமிழ் தேசியக் கூட்டமைப்பு,, தமிழர் விடுதலை கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுயேச்சைக்குழுக்கள் ஆகியன இம்முறைத் தேர்தலில் களமிறங்கியுள்ளன. அந்தவகையில் பிரதான தமிழ் கட்சிகளுக்குமிடையில் வடக்கில் பாரிய போட்டி நிலவியதுடன் இன்று பலப்பரீட்சை இடம்பெறவுள்ளது.
கிழக்கு
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையிலும் அங்கு போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கிடையே கடும்போட்டி நிலவுகிறது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின்றது. அதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது அம்பாறையில் தனித்து போட்டியிடுகின்றது. அத்துடன் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் போட்டியிடுகின்றது. மேலும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுன போன்ற கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் தேர்தலில் களமிறங்கியுள்ளன. கிழக்கு மாகாணத்திலும் கட்சிகளிடையே தேர்தலில் பலத்தபோட்டி நிலவுகின்றது.
மலையகம்
இம்முறை மலையகத் தேர்தல் களமும் கடுமையாக சூடுபிடித்திருக்கின்றது. ஒருமித்த முற்போக்கு கூட்டணி மலையகத்தில் சில இடங்களில் தனித்தும் சில இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் போட்டியிடுகின்றது.
நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, பதுளை மாவட்டங்களில் முற்போக்கு கூட்டணி கூட்டடாகவும் தனித்தும் போட்டியிடுகின்றது.
மலையகத்தில் இம்முறை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்தில் சுதந்திரக்கட்சியுடன் இணைந்து சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றது.
அதேபோன்று ஏனைய மாவட்டங்களான பதுளை, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னத்தில் இ.தொ.கா. போட்டியிடுகின்றது.
கொழும்பு
கொழும்பு மாவட்டத்திலும் இம்முறை அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. கொழும்பு மாவட்டத்தில் ஒருமித்த முற்போக்கு கூட்டணி தனித்து போட்டியிடுகின்றது. அதேபோன்று ஜனநாயக மக்கள் காங்கிரஸும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் இணைந்து போட்டியிடுகின்றது. மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுன, மக்கள் விடுதலை முன்னணி, மற்றும் சுயேச்சைக் குழுக்களும் கொழும்பில் போட்டியிடுகின்றன.
அந்தவகையில் இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் மிகவும் முக்கியத்துவமிக்கதாக காணப்படுகின்றது. இம்முறை உள்ளூராட்சி தேர்தலானது வட்டாரம் மற்றும் விகிதாசார முறைமை என்ற கலப்பு முறைமையில் நடைபெறுகின்றது. 60 வீதம் வட்டாரமுறைமையிலும் 40 வீதம் விகிதாசார முறைமையிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. மக்கள் நேரகாலத்துடன் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்றுகாலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

