அணிகள் இணைப்பு குறித்து தினகரன் கூறியது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

537 0

அணிகள் இணைப்பு குறித்து டி.டி.வி.தினகரன் கூறியது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பஸ் கட்டண உயர்வை கண்டித்து அனைத்து கட்சி கூட்டத்தில் வருகிற 13-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதே…

பதில்:- போக்குவரத்து துறை சீரழிவதற்கு தி.மு.க. அரசு தான் காரணமாக இருந்தது. தி.மு.க. உடன் சேர்ந்து இருக்கும் கட்சிகள் ஒவ்வொன்றும் முரண்பாடாக இருக்கின்றன. முரண்பட்ட கூட்டணியாகத்தான் அது இருக்கிறது. பொதுமக்களுக்காக சேர்ந்து அவர்கள் போராடவேண்டும் என்று நினைக்கவில்லை. அ.தி.மு.க. அரசை வீழ்த்திவிடவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார்கள். அதில் எந்தவித வெற்றியும் அவர்களுக்கு கிடைக்காது. நாங்கள் (அ.தி.மு.க.) பலமாக இருக்கிறோம். பலவீனமாக இருப்பதால்தான் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். எத்தனை பேர் சேர்ந்தாலும் எங்களை ஒன்றும் செய்யமுடியாது.

கேள்வி:- 6 பேரை நீக்கிவிட்டு எல்லோரும் வாருங்கள், 18 பேரில் இருந்து ஒருவரை முதல்-அமைச்சராக தேர்ந்து எடுக்கலாம் என்று அணிகள் இணைப்பு குறித்து டி.டி.வி.தினகரன் கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- தி.மு.க. செயல் தலைவர் உடன் சேர்ந்ததால், செயல் தலைவர் தந்தையின் தாக்கம் இவரை தாக்கியிருக்கிறது. நடக்காத ஒன்றை அவர் கூறியிருக்கிறார். சிரித்துக்கொண்டே அழுவதுதான் டி.டி.வி.தினகரனின் தற்போதைய நிலை. கூட இருக்கும் 4 பேரை திருப்திப்படுத்த எது வேண்டுமானாலும் சொல்லலாம். எனவே டி.டி.வி.தினகரன் கூறியது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. அதுபோன்ற நிலை ஒருபோதும் ஏற்படாது.

கேள்வி:- அ.தி.மு.க. சின்னம் இல்லாமல் போட்டியிட்டால் டெபாசிட் கூட பெற்றிருக்கமாட்டார்கள் என்று டி.டி.வி.தினகரன் கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- கில்லாடித்தனமான வேலை செய்வது டி.டி.வி.தினகரனுக்கு கைவந்த கலை. எனவே தான் ஹவாலா மூலம் ரூ.20 நோட்டு கொடுத்து, வெற்றி பெற்றிருக்கிற மமதையில் இருக்கிறார். ஆர்.கே.நகர் மக்கள் ஹவாலா நபரை எங்கே? என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஹவாலா மூலம் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனநாயகத்தை பற்றி பேசுவதற்கு அருகதையும், தகுதியும் கிடையாது.

கேள்வி:- வேலை கிடைக்கவில்லை என்றால் பக்கோடா விற்பனை செய்யலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்த கருத்து குறித்து அ.தி.மு.க. நிலைப்பாடு என்ன?

பதில்:- சுயவேலைவாய்ப்பு என்பது ஊக்கப்படுத்தப்படவேண்டிய ஒன்று. வேலைவாய்ப்பை நாம் ஒருபக்கம் நம்பி இருந்தாலும், சுயவேலைவாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். செய்யும் தொழிலே தெய்வம் என்ற அடிப்படையிலே எந்த தொழிலும் செய்யலாம். இதில் கவுரவம் பார்க்கக்கூடாது.இவ்வாறு ஜெயக்குமார் பதில் அளித்தார்.

Leave a comment