பஸ் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி இடதுசாரிகள் 12-ந்தேதி கோட்டை நோக்கி பேரணி

469 0

பஸ் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி இடதுசாரிகள் வருகிற 12-ந்தேதி கோட்டை நோக்கி பேரணி-மறியல் போராட்டம் நடத்தவேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

தமிழக அரசு அறிவித்துள்ள பஸ் கட்டண உயர்வு குறித்து இடதுசாரி கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் ஆலோசனை கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது.

இதில், சி.பி.ஐ. (எம்.எல்.) மாநில செயலாளர் எஸ்.குமாரசாமி, எஸ்.யூ.சி.ஐ. (கம்யூனிஸ்டு) மாநில செயலாளர் ஆ.ரங்கசாமி மற்றும் கே.பாலகிருஷ்ணன் உள்பட இடதுசாரி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

* போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை, மாநில அரசு தனது நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்வதன் மூலம் சரிபடுத்தவேண்டும். மாறாக விலை உயர்வு என்ற அடிப்படையில் மக்கள் மீது சுமை ஏற்றுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

* பஸ் கட்டண உயர்வை முற்றிலும் திரும்பப்பெற வேண்டும்.

* பஸ் கட்டண உயர்வுக்காக போராடிய மாண வர்கள், பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு களை வாபஸ் பெறவேண்டும்.

* போக்குவரத்து கழகங்களின் இழப்பை ஈடு செய்ய மாநில அரசே நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். மேலும் முறைகேடுகளை தடுக்கவேண்டும்.

* இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 12-ந்தேதி சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடத்தவும், பிற மாவட்டங்களில் உள்ள தலைநகரங்களில் மறியல் போராட்டங்களை நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு தரவேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a comment