தப்பி ஓடிய ரவுடிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவு!

517 5

பிரபல ரவுடி பிறந்தநாள் விழாவில் பிடிபட்ட 71 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தப்பி சென்றவர்களை சுட்டுப்பிடிக்க பிடிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கத்தில் நேற்று முன்தினம் சூளைமேட்டைச் சேர்ந்த பிரபல ரவுடி பினு தனது பிறந்த நாளை சுமார் 150 ரவுடிகள் புடை சூழ பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

பள்ளிக்கரணை பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரவுடி மதன் என்ற பல்லு மதன் சிக்கினான். பினுவின் கூட்டாளியான அவனிடம் நடத்திய விசாரணையில் தான் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

இதனை தொடர்ந்து மலையம்பாக்கத்தில் பினு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இடத்தை போலீசார் இரவு 11 மணிக்கு சுற்றி வளைத்தனர். அப்போது சினிமா பாணியில் 150-க்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒரே இடத்தில் திரண்டு இருந்தனர்.

2 அடி நீளமுள்ள பெரிய அரிவாளை கொண்டு கேக் வெட்டிய ரவுடி பினுவுக்கு ஆள் உயர ரோஜாப்பூ மாலை அணிவித்து அழகு பார்த்த ரவுடிகள் வாழ்த்து கோ‌ஷங்களையும் எழுப்பினர். பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன. மது போதையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பினுவின் கூட்டாளிகள் குத்தாட்டத்திலும் ஈடுபட்டனர்.

ரவுடிகள் எழுப்பிய சத்தம் கேட்டு மலையம்பாக்கம் ஊர் மக்கள் அங்கு திரண்டனர். இதனை தொடர்ந்து பிறந்த நாள் விழாவில் அதிரடியாக நுழைந்த போலீசார் துப்பாக்கி முனையில் 75 ரவுடிகளை சுற்றி வளைத்து பிடித்தனர்.

போலீசாரின் இந்த அதிரடி வேட்டைக்கு பொது மக்கள் பேருதவியாக இருந்தனர். இதன் காரணமாக போலீசார் நடத்திய இந்த ஆபரே‌ஷன் வெற்றியில் முடிந்தது.

பிடிபட்ட 75 ரவுடிகளும் எந்தெந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது பற்றிய பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதோடு அவர்கள், அவர்களது குற்ற செயல்களுக்கு ஏற்ப ஏ, பி, சி. என தரம் பிரிக்கப்படடனர். இதன் பின்னர் அவர்கள் வசிக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சென்னையில் உள்ள 12 போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 71 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

புளியந்தோப்பு, அம்பத்தூர், அண்ணாநகர், சூளைமேடு, ராயப்பேட்டை, மாம்பலம், மாதவரம், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், பூந்தமல்லி ஆகிய போலீஸ் நிலையங்களில் தனித்தனியாக ரவுடிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசார் நடத்திய இந்த அதிரடி வேட்டையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ரவுடிகளையும் ஒன்று திரட்டிய முக்கிய ரவுடியான பினு மோட்டார்சைக்கிளில் தப்பி ஓடிவிட்டான்.

அவனது நெருங்கிய கூட்டாளிகளான கனகு, விக்கி ஆகியோரும் தப்பி ஓடிவிட்டனர். இவர்களோடு 30-க்கும் மேற்பட்ட ரவுடிகளும் போலீஸ் பிடியில் சிக்காமல் ஓடி விட்டனர். இவர்கள் அனைவரையும் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ரவுடிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ரவுடி பினு தனது கூட்டாளிகளுடன் சொந்த ஊரான கேரளாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களை பிடிக்க கேரளாவுக்கு தனிப்படை விரைந்துள்ளது. கிருஷ்ணகிரி, வேலூரிலும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பினுவின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக சூளைமேடு நமச்சிவாயபுரத்தில் வசித்து வந்த பினு அப்பகுதியில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தான். அவன் மீது சூளைமேடு, அரும்பாக்கம் போலீஸ் நிலையங்களில் கொலை வழக்குகளும், ஆள் கடத்தல் மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளும் உள்ளன.

சில வழக்குகளில் பினு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளான். சூளைமேட்டில் இருந்து கொளத்தூருக்கு இடம் பெயர்ந்த பினு சத்தமில்லாமல் தனது கூட்டாளிகளை ஒரே இடத்தில் திரட்டி போலீஸ் வட்டாரத்தை கலங்கடித்துள்ளான்.

இதனை தொடர்ந்து சென்னை மாநகர் முழுவதும் தலைமறைவாக உள்ள ரவுடிகளை தீவிரமாக கண்காணித்து கைது செய்ய போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். துணை கமி‌ஷனர்களும் தங்களது பகுதியில் உள்ள ரவுடிகளை வேட்டையாடி சிறையில் அடைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a comment