விழுப்புரத்தில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புமாறு வீடு, வீடாக சென்று பெற்றோர்களிடம் தலைமை ஆசிரியர் கெஞ்சும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விழுப்புரத்தில் காமராஜர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பாலு இருந்து வருகிறார். இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் 6 ஆயிரம் மாணவர்கள் படித்து வந்தனர்.
தற்போது 850 மாணவர்கள்தான் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்தது. எனவே தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துமாறு தலைமை ஆசிரியர் பாலுவிடம் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.
இதையடுத்து மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று தலைமை ஆசிரியர் பாலு சிந்தித்தார்.
சரியாக படிக்காத மாணவர்களை தனியாக அழைத்து பேசினார். அவர்கள் படிக்காததற்கான காரணங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர்கள் காலில் விழுந்து வணங்கி நீங்கள் நன்றாக படிக்க வேண்டும். அப்போதுதான் உங்களது எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று கெஞ்சினார். இது மாணவர்களை நெகிழ வைத்தது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் நன்றாக படிக்க தொடங்கி விட்டார்கள்.
பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. 50 மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வராமல் இருந்தனர். இதனால் அவர்களை பள்ளிக்கு வரவழைக்க என்ன செய்யலாம் என்று தலைமை ஆசிரியர் பாலு யோசித்தார்.
இதையடுத்து விழுப்புரம் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் பெற்றோரை சந்தித்து பேசினார். மாணவர்களை பள்ளிக்கு அனுப்புமாறு அவர்களின் கைகளை பிடித்து கெஞ்சினார்.
பள்ளிக்கு வந்து படித்தால் உங்கள் பிள்ளைகள் முன்னேற்றம் அடைவார்கள். எனவே அவர்களை பள்ளிக்கு அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டார். அவர்களும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதாக உறுதி அளித்தனர். அதன்படி அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வருகின்றனர்.

பள்ளிக்கு வரும் சில மாணவர்கள் மதிய நேரத்தில் வீட்டில் சாப்பிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார்கள். பின்னர் அவர்கள் வருவதில்லை. இதனால் அந்த மாணவர்களிடம் சாப்பிடுவதற்கு மதியம் வீட்டிற்கு செல்ல வேண்டாம். பள்ளியிலேயே சாப்பிடுங்கள் என்று தலைமை ஆசிரியர் பாலு கூறினார். மேலும் மாணவர்களுடன் அமர்ந்து அவரும் சாப்பிட்டார். இதனால் மாணவர்கள் ஆசிரியரின் அன்பு பிடியில் இருந்து தப்ப முடியாமல் அவர்களும் பள்ளியிலியே அமர்ந்து சாப்பிட தொடங்கினார்கள்.
மாணவர்களிடம் நல்லொழுக்கத்தையும் ஆசிரியர் பாலு கற்பித்து வருகிறார். சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வர வேண்டும் என்று அவர்களுக்கு அன்பு கட்டளை இடுகிறார். நன்றாக படிக்காத மாணவர்களுக்கு தண்டனை கொடுப்பதை நிறுத்தி விட்டு அவர்களை அரவணைத்து அவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். படிப்பில் மந்தமாக இருக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அதிக கூடுதலாக கவனம் செலுத்தி சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள காமராஜர் நகராட்சியில் தான் ஆசிரியர் பாலு படித்தார். பின்னர் இங்குள்ள அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து முடித்தார். தற்போது தான் படித்த பள்ளிக்கே தலைமை ஆசிரியராக வந்துள்ளார். இந்த பள்ளியில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால் மிகவும் வருத்தப்பட்டார். தான் படித்த பள்ளி சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். எனவே மாணவர்களிடம் அன்பாக பேசி தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
மாணவர்களிடம் உங்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு செய்கிறது. நீங்கள் நன்றாக படியுங்கள் இளமை காலத்தை வீணாக்கி விடாதீர்கள். சிறப்பாக படித்தால் உங்கள் எதிர் காலம் பிரகாசமாக இருக்கும். நீங்கள் பெரிய அதிகாரிகளாக வரலாம் என்று அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். அவர்களும் நன்றாக படிக்கிறார்கள். மற்றவர்கள் விமர்சனம் செய்வதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவரை நாங்கள் பாராட்டுகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

