பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தவறிழைக்கவுமில்லை; விசாரணை நடத்தப் போவதுமில்லை!

329 0

லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கப் போவதில்லை என்று இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க கூறியுள்ளார்.

அவருக்கு எதிராக விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கான தேவை இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதனையடுத்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை பணி இடைநிறுத்தம் செய்ய இலங்கை வௌிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு அந்த பணி நிறுத்த உத்தரவை இரத்து செய்தார்.

அதன்படி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீண்டும் அதே பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தேடிப் பார்க்கும் போது பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ எவ்வித ஒழுக்க மீறல் செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்றும் அவருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கான எவ்வித தேவையும் இல்லை என்றும் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க கூறியுள்ளார்.

Leave a comment