முதல்வர் பழனிசாமி அரசு ஓராண்டு நிறைவு நாள் – 16-ந்தேதி புதிய அறிவிப்புகள் வெளியாகும்

922 0

முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று வருகிற 16-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெற இருப்பதால் அன்றைய தினத்தில் புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு பதவி ஏற்று வருகிற 16-ந்தேதியுடன் ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந்தேதி முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

சட்டசபையில் 18-ந்தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றது. பிப்ரவரி 20-ந்தேதி முதல்-அமைச்சர் இருக்கையில் அமர்ந்து பணியை தொடங்கினார். இந்த ஒரு வருட காலத்தில் அவருக்கு பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் அதை சமாளித்து ஆட்சியை வழி நடத்தினார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவியும், பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் வழங்கி பிளவுபட்ட அ.தி.மு.க.வை இணைய வைத்தார். இரட்டை இலை சின்னத்தை மீட்டு தலைமை கழகத்தை தக்க வைத்துக் கொண்டார். 6 அமைச்சர்களின் இலாகாவையும் மாற்றி அமைத்தார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்து நெருக்கடி கொடுத்த போதும் அதை சமாளித்தார். 19 எம்.எல்.ஏ.க்களில் ஜக்கையன் எம்.எல்.ஏ. அணி மாறி எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்து விட்டார்.

வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி உள்பட 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஜக்கையன் எம்.எல்.ஏ., சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்ததால் அவரது எம்.எல்.ஏ. பதவி தப்பியது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதன் மீதான விசாரணை முடிந்துள்ள நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டு டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனாலும் அவரையும் எடப்பாடி பழனிசாமி அரசியல் ரீதியாக சமாளித்து வருகிறார்.

நீட் தேர்வு விவகாரம், பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக், பஸ் கட்டண உயர்வு என பல்வேறு நெருக்கடிகளை கடந்து ஆட்சியை வழிநடத்தும் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவையும், ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவையும் சிறப்பாக கொண்டாட உள்ளார்.

இதற்கு முன்பாக ஒரு ஆண்டு நிறைவு விழாவையும் வருகிற 16-ந்தேதி கொண்டாட உள்ளார். அன்றைய தினம் புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசின் சார்பாக ஒரு ஆண்டு சாதனை மலர் புத்தகமும் வெளியிட ஏற்பாடு நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஒரு ஆண்டு நிறைவு விழாவை அவரவர் தொகுதியில் கொண்டாட ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Leave a comment