திருவண்ணாமலை அரசு தொடக்கப்பள்ளியில் கலெக்டருக்கு பாடம் நடத்திய மாணவிகள்

906 0

திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் தரையில் அமர்ந்து 2 மாணவிகள் சுற்றுச்சூழல் குறித்து நடத்திய பாடங்களை கேட்டறிந்தார்.

திருவண்ணாமலை அடுத்துள்ள மலப்பாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளான பூஜா, மற்றும் வைஷ்ணவி ஆகிய இருவரும் சில நாட்களுக்கு முன்பு சுற்றுப்புற சூழல் குறித்த சில திட்டங்கள், சமூக அக்கறை தொடர்பான கருத்துகளை பதிவு செய்து கலெக்டர் கந்தசாமிக்கு கடிதம் எழுதினர்.

இதை படித்த கலெக்டர் கந்தசாமி, அந்த மாணவிகளை பார்க்க முடிவு செய்தார். கடந்த 3-ந் தேதி பூஜா அவரது தாயாருடன் சென்றிருந்தார். எனினும் வைஷ்ணவி செல்லவில்லை. கலெக்டர் தனது அலுவலகத்தில் பூஜாவிடம் அந்த திட்டங்கள் மற்றும் கருத்துகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். பின்னர் அவரின் திறமையை பாராட்டும் விதமாக தன்னுடைய இருக்கையில் அமர வைத்து கவுரப்படுத்தினார்.

இந்த நிலையில் நேற்று அந்த மாணவிகளை அழைத்துக்கொண்டு திருவண்ணாமலை வேங்கிக்கால் புதூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்றார். அங்கு அவருடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமாரும் சென்றிருந்தார். 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பூஜாவையும், வைஷ்ணவியையும் சுற்றுச் சூழல் குறித்த திட்டத்தை மாணவர்களுக்கு பாடம் எடுக்க கூறினார்.

அவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்தும் பாடம் எடுத்தனர்.

அப்போது கலெக்டர் கந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஆகிய இருவரும் தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுடன் தரையில் ஒன்றாக அமர்ந்து பாடம் நடத்தியதை பார்வையிட்டு அவர்கள் கூறிய கருத்துகளையும் கேட்டறிந்தனர்.

அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் கலெக்டர் கந்தசாமி கூறுகையில், ‘‘அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பள்ளிக்கு சென்று இதுபோன்று சமூக சிந்தனை குறித்து பாடம் எடுக்கலாம். சிறு வயதிலேயே சமூக அக்கறை குறித்து மாணவர்கள் கற்றுக்கொள்ளும்போது அவர்களது மனதில் ஆழமாக பதியும். இந்தியா வல்லரசாக அப்துல் கலாம் கண்ட கனவின் இலக்கை அடைய பள்ளிக்கூடம் ஒரு சிறந்த வழியாகும்’’ என்றார்.

Leave a comment