பலர் தூக்குக் கயிற்றுக்கும் போகும் நிலைமை ஏற்படும்-ஏரான் விக்கிரமரத்ன

217 0

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் இந்த ஆட்சியினையும் தாண்டி கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து ஆராயப்பட வேண்டும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ள போதிலும் அதையும் தாண்டி 1990 ஆம் ஆண்டில் இருந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என நிதி இராஜங்க அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். இந்த ஆட்சி முழுமையான ஆட்சி அல்ல. ஆனால் நாம் முன்னெடுக்கும் சுயாதீன நீதி செயற்பாடுகள் காரணமாக பலர் தூக்குக் கயிற்றுக்கும் போகும் நிலைமை ஏற்படும். குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்கு அறிக்கைகள் தொடர்பிலான  பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த சபை ஒத்திவைத்து வேளை  பிரேரணை மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதானது,

பிணைமுறி , நிதி மோசடி அறிக்கைகள் குறித்து இன்று விவாதிக்கப்படுகின்றது, எனினும் விவாதத்தை விடவும் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்பதே முக்கியமானது. நாட்டு பொது மக்களும் அதையே விரும்புகின்றனர். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் கோப் குழுவில்  எதிர் தரப்பின் ஒருவரை நியமிப்பதாக  வாக்குறுதி வழங்கினோம். அதன் அடிப்படையில் நியமனங்கள் இடம்பெற்று அதன் மூலம் மத்திய வங்கி ஊழல் விவகாரங்கள் வெளிவர ஆரம்பித்தது. அதன் பின்னர் குறித்த விடயங்கள் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இவை  பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இன்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  கள்ளர்கள் சகல  இடங்களிலும் உள்ளனர். ஊழல் மோசடிகள் என்பது எமது கலாசாரத்தின் ஒரு அங்கமாக பதிவாகிவிட்டது. இன்று ஊழல் குறித்து கூறும் நபர்களுக்கும் அது நன்றாகவே தெரியும். எனினும் மாற்றம் என்னவென்றால்  முன்பெல்லாம் ஊழல் குறித்து பேசப்பட்ட போதிலும் குற்றவாளிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை.   எனினும் இன்று அவ்வாறு அல்ல , குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதே அடுத்த கட்ட விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  இதுதான் எமது மாற்றம். ஜனாதிபதி அணைக்குழு அறிக்கைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment