துபாயில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் இலங்கையின் உயர் மட்ட அதிகாரி கள் குழுவொன்று கூடி ஆராய்ந்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம், நிதி மோசடி விசாரணைப்பிரிவு, சட்டமா அதிபர் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழுவே அவசியமான பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க நேற்று முன்தினம் துபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட வீரதுங்க விசாரணைகளுக்காக தொடர்ந்தும் துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா செல்லும் வழியில் விமானம் மாறிச் செல்வதற்காக துபாயில் வந்திறங்கியபோதே வீரதுங்க அங்கிருக்கும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.
மிக் விமானம் கொள்வனவு தொடர்பில் வீரதுங்கவின் இரண்டு கடவுச்சீட்டுக்களையும் பறிமுதல் செய்யுமாறு கடந்த வருடம் ஜூன் 30 ஆம் திகதியன்று கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதற்கமைய இலங்கை அரசாங்கத்தால் அவருக்கு விநியோகிக்கப்பட்டுள்ள இராஜதந்திர கடவுச்சீட்டு மற்றும் பொது கடவுச்சீட்டு ஆகியவற்றை குற்றவியல் சட்டத்தின் 124வது பிரிவுக்கமையவும் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் 51 சி பிரிவுக்கமையவும் பறிமுதல் செய்யுமாறு நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டிருந்தார்.
மேலும் மிக் விமான கொள்வனவு மோசடி தொடர்பில் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்காக நீதிமன்றத்தால் இன்டர்போலுக்கு பிடிவிறாந்தும் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

