மக்களுடைய பணத்தில் விருந்துபசாரம் மேற்கொள்வோர்கள், எதிர்வரும் 10ஆம் திகதிக்குப் பிறகு, காணாமல் போய்விடுவார்கள்” என, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமகன் தொண்டமான் தெரிவித்தார்.
தலவாகலை நகரசபை மைதானத்தில், நேற்று இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
குறித்த நிகழ்வில் தொண்டமான் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“நாங்கள், ஜனாதிபதியோடு இணைந்து, சேவல் சின்னத்திலும் வெற்றிலைச் சின்னத்திலும் போட்டியிடுகின்றோம். அந்தவகையில், இம்முறை இடம்பெறுகின்ற உள்ளுராட்சிசபைத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் நிச்சயமாக 12 சபைகளையும் கைப்பற்றி, எங்கள் ஜனாதிபதியை மேலும் பலபடுத்துவோம்.
“தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கித் தருவதாக, கடந்த பொதுத் தேர்தலின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தலவாகலை நகரசபை மைதானத்தில் வைத்து எமது மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கிவிட்டுச் சென்றார், ஆனால், எமது மக்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை. அதேபோல், ஒன்றரை வருடத்துக்கான நிலுவைப் பணம் போன்ற அனைத்துக்கும், ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்த அமைச்சர்கள் ஆப்புவைத்தனர்.
“அதேபோல், மக்களுடைய ஈ.பி.எப் பணம் அனைத்தும், யானையின் வயிற்றுக்குள் போய்விட்டது. ஆனால், எங்கள் ஜனாதிபதி நேர்மையாகவும் நியாயமாகவும் எமது மக்களுக்கு சேவையைச் செய்துவருகிறார்.
“சிறந்த நகரமாக விளங்கிய ஹட்டன் நகரம், இன்று போதைப்பொருள் நகரமாக மாறிவிட்டது. எனவே, போதைப்பொருள் நகரமாக மாறி வருகின்ற ஹட்டன் நகரத்தை, மீண்டும் மாற்றியமைக்க வேண்டுமானால், எதிர்வரும் 10ஆம் திகதி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை, எமது மக்கள் பலப்படுத்த வேண்டும்” என, அவர் மேலும் தெரிவித்தார்

