இந்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் – ஜனாதிபதி சந்திப்பு

323 0

சட்டம், ஒழுங்கு மற்றும் இலத்திரனியல் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான இந்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தார்.

இந்தியாவின் பீகார் பிராந்தியத்தை பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் பிரதிநிதியும் சட்டத்தரணியுமான ரவி சங்கர் பிரசாத் இந்திய நன்கொடை செயற்திட்டத்தை நெறியாள்கை செய்வதுடன், சகல பிரஜைகளுக்கும் கணினி மயப்படுத்தப்பட்ட அடையாளத்தினைப் பெற்றுக்கொடுக்கவும் அதனூடாக சகல சமூக கொடுப்பனவுகளை வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கையிலும் தகவல் தொடர்பாடல் துறையில் ஏற்பட்டுள்ள மேம்பாட்டினை பாராட்டிய இந்திய அமைச்சர், இன்று இந்தியாவில் சமூக அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக தகவல் தொழில்நுட்பம் உபயோகிக்கப்படும் முறை தொடர்பாகவும் விரிவாக தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பம் துறையில் இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கிடையே காணப்படும் தொடர்புகளை மேலும் விருத்தி செய்வதற்கான தேவைப்பாடுகள் குறித்து இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தியதையடுத்து, அதற்கான சகல ஒத்துழைப்புகளையும் தாம் பெற்றுத்தருவதாக இந்திய அமைச்சர் தெரிவித்தார்.

லக்‌ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த உரை நிகழ்த்துவதற்காக ரவி சங்கர் பிரசாத் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான தகவல் தொழில்நுட்பத் துறையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று இன்று முற்பகல் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.

ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்துவும் கலந்துகொண்டார்.

Leave a comment