உலக தமிழ் ஆசிரியர் தினம் குறித்து கலந்துரையாடல்

345 0

உலக தமிழ் ஆசிரியர் தினம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்ற பொழுதே இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நான் அண்மையில் மலேசியா நாட்டிற்கு விஜயம் செய்து அங்குள்ள கல்வி அமைச்சர் கமலநாதனுடன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கல்வி நிலைப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடினோம். இதன்போது உலக தமிழ் ஆசிரியர் தினம் என்ற ஒன்றை ஏற்படுத்தினால் என்ன என்பது தொடர்பாக ஆராயப்பட்டது.

இது தொடர்பாக சிங்கப்பூர் நாட்டின் கல்வி அமைச்சர் அதேபோல தமிழ் நாட்டின் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோருடனும் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன் பிரகாரம் எதிர்வரும் 05.01.2018 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் இந்த சந்திப்பு இந்தியாவின் தமிழ் நாட்டின் சென்னையில் அமைந்துள்ள லீ மெரிடியன் விருந்தகத்தில் நடைபெறவுள்ளது.

இதில் மலேசியா, சிங்கப்பூர், தமிழ் நாடு கல்வி அமைச்சர்களுடன் நானும் இதில் கலந்து கொள்ளவுள்ளேன். இதன்போது எங்களுக்குள் ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்தி அதன் மூலம் இதனை சர்வதேசத்திற்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது தொடர்பாக நாங்கள் தீர்மானிக்க இருக்கின்றோம்.

விசேடமாக இந்த நான்கு நாடுகளின் கல்வி அமைச்சர்கள் கலந்து கொள்வதில் ஒரு முக்கியத்துவம் இருக்கின்றது. இந்த நாடுகளில் எல்லாம் தமிழ் மொழி தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழர்கள் அதிகமாக செறிந்து வாழ்கின்றார்கள்.

இந்த தினத்தை ஏற்படுத்துவதுடன் இதனை ஒரு அமைப்பாகவும் செயற்படுத்த முடியுமா? என்பது தொடர்பாகவும் விரிவாக ஆராய இருக்கின்றோம். உலக தமிழ் ஆசிரியர் அமைப்பு என்ற ஒன்றை ஏற்படுத்த முடியுமானால் அதன் மூலமாக அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழ் ஆசிரியர்கள் அவர்களுடைய தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள முடியும்.

இதன் மூலமாக தங்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் கற்பித்தலில் மற்ற நாடுகளில் எவ்வாறான நுனுக்கங்கள் கையாளப்படுகின்றது என்பது தொடர்பாகவும் ஒரு தெளிவான விடயத்தை தெரிந்து கொள்ள முடியும்.

இதன் மூலமாக தமிழ் சமுதாயம் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அவர்களுடனான ஒரு தொடர்பையும் ஏற்படுத்தி கொள்ள முடியும். இந்த செயற்பாடின் ஊடாக தமிழ் ஆசிரியர்கள் பல நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment