மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று (30) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆணைக்குழுவின் ஆயுள் காலமும் நாளையுடன்(31) நிறைவடையவுள்ளதால் அறிக்கை முழுமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது இன்று அல்லது நாளைய தினம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவுள்ளதாக ஏற்கனவே ஆணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகம்சூரிய தெரிவித்திருந்தார்.
கடந்த 2015-2016 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றதாக கூறப்படும் மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு இவ்வருட ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளான கே.ரி. சித்ரசிறி, பிரசன்ன சுஜீவ ஜயவர்தன மற்றும் ஓய்வு பெற்ற பிரதி அரச கணக்காய்வாளர் கந்தசாமி வேலுப்பிள்ளை ஆகியோர் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய நபர்கள் சம்பந்தப்படுவதாக கூட்டு எதிர்க் கட்சி உட்பட பலரினாலும் குற்றம்சாட்டப்பட்டதனாலேயே ஆணைக்குழு அமைக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்திலுள்ள இரு முக்கிய கட்சிகளின் பிரச்சார நடவடிக்கை சூடேறியுள்ள காலப்பகுதியில் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை அரசியலில் பல நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என்பது அரசியல் அவதானிகள் பலரினதும் அனுமானம் ஆகும்.

