மெக்சிகோ பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

216 0

மெக்சிகோவில் தனது மகன் படிக்கும் பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மெக்சிகோவில் செயல்படும் சர்வதேச போதை கடத்தல் கும்பலை ஒடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. போதைக் கும்பலை சேர்ந்த ஏராளமானோரை போலீசார் சுட்டு வீழ்த்தி உள்ளனர். எனினும் அந்த கும்பலை முழுமையாக ஒழிக்க முடியாத நிலை உள்ளது. இது ஒருபுறமிருக்க வன்முறையும் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், வேராகுரூஸ் மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையளர் குமாரோ பெரேஸ் (வயது 35), நேற்று இரவு அகேகான் நகரில் தன் மகன் படிக்கும் பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றார். அப்போது விழா நடந்த வகுப்பறைக்குள் நுழைந்த ஒரு ஆசாமி, பேரேஸை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டான். இதில் பெரேஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அப்குதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது.
நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் போதை கடத்தல் கும்பல் குறித்து பெரேஸ் தொடர்ந்து எழுதி வந்ததால், அவரை போதை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவன் சுட்டுக் கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு மெக்சிகோவுக்கான அமெரிக்க தூதர் ராபர்ட்டா ஜேக்கப்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களை கொலை செய்வதன் மூலம் உண்மையை கொன்றுவிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மெக்சிகோவில் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை 111 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a comment