அமெரிக்கா விசா கெடுபிடி: கனடாவுக்கு படையெடுக்கும் இந்திய என்ஜினீயர்கள்

232 0

அமெரிக்காவில் எச்-1பி விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் அதிக அளவில் கனடாவுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர்.

இந்திய கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் உள்ளிட்ட அதிதொழில் நுட்ப வல்லுனர்கள் அமெரிக்காவில் பெருமளவில் பணிபுரிகின்றனர். தற்போது அங்கு அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கர்களுக்கு வேலையில் முன்னுரிமை என்ற கொள்கையை அவர் பின்பற்றுகிறார். அதனால் வெளிநாட்டினருக்கு அங்கு பணி வழங்குவதில் அதிக ‘கெடுபிடி’ விதிக்கப்பட்டுள்ளது. ‘எச்-1பி’ விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. ‘எச்-1பி’ விசா பெற்றவர்களின் மனைவிமார்கள் பணிபுரியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான புதிய சட்டம் விரைவில் வர உள்ளது.

இத்தகையை கடும் கெடுபிடிகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் எதிரொலியாக வெளிநாட்டு கம்ப்யூட்டர் மற்றும் தொழில் நுட்ப என்ஜினீயர்களின் கவனம் கனடா பக்கம் திரும்பியுள்ளது. குறிப்பாக இந்தியாவை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் அதிக அளவில் கனடாவுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர்.

அதற்கு வசதியாக கனடா பிரதமர் டிருடியூ வெளிநாட்டு அதிதொழில் நுட்ப வல்லுனர்களுக்கு ‘விசா’ வழங்குவதில் தாராளமயத்தை கடைபிடித்து வருகிறார்.

அதேபோன்று கனடா நாட்டில் உள்ள கம்பெனிகளும் பணி நியமன ஆணை வழங்குவதில் அவசரம் காட்டி வருகின்றனர். முன் பெல்லாம் பணி நியமன விண்ணப்பங்களை பரிசீலிக்க பல மாதங்கள் ஆகும். தற்போது 10 நாள் முதல் 2 வாரங்களில் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கனடா பிரதமர் டிருடியூவின் ‘அதிவிரைவு விசா’ வழங்கப்படுகிறது. இதனால் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு என்ஜினீயர்கள் பெருமளவில் கனடாவில் குவிந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டில் மட்டும் 3 லட்சத்து 20 ஆயிரம் வெளிநாட்டினர் அங்கு சென்று பணியில் சேர்ந்துள்ளனர். அதேபோன்று கனடாவில் வெளிநாட்டிருக்கான குடியுரிமையும் பெருமளவில் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜூன் 12 முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை 988 இந்தியர்கள் கனடாவில் குடியுரிமை பெற்றுள்ளனர். அதேபோன்று 296 சீனர்களும், 92 பிரெஞ்சுகாரர்களும், 75 பிரேசிலியர்களும், 68 தென்கொரியா நாட்டினரும், 52 அமெரிக்கர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment