என் தந்தைக்கு வைத்த குறிக்கு பெரியபாண்டியன் பலி: தேஜாராமின் மகள்-மகன்

220 0

‘என் தந்தைக்கு வைத்த குறிக்கு பெரியபாண்டியன் பலியாகிவிட்டார்’ என்றும், ‘இருட்டில் தவறுதலாக குண்டு பாய்ந்ததால் இந்த சம்பவம் நடந்துவிட்டது’, என்றும் தேஜாராமின் மகள் மற்றும் மகன் கூறியுள்ளனர்.

ராஜஸ்தானில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து கொள்ளை கோஷ்டியை சேர்ந்த தேஜாராமின் மகள் ராஜன் சவுத்ரி, மகன் பிரகாஷ் சவுத்ரி ஆகியோரிடம், நிருபர் அரவிந்த், ஒளிப்பதிவாளர் பிரதீப் சவ்கான் உதவியுடன் சிறப்பு பேட்டி கண்டார். அவர்கள் கூறிய விவரம் வருமாறு:-
தேஜாராமின் மகள் ராஜன் சவுத்ரி கூறியதாவது:-
சம்பவம் நடந்தபோது எங்கள் வீட்டில் நாங்கள் அனைவரும் நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தோம். அப்போது நாதுராம் எங்கள் வீட்டில் இருப்பது எனக்கு தெரியாது. இந்தநிலையில் திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. பின்னர் சிலரது குரல்களும் பயங்கரமாக கேட்டது. உடனடியாக நாங்கள் எழுந்து சென்று பார்த்தோம். அப்போது சிலர் (தமிழக தனிப்படை போலீசார்) எங்கள் வீட்டின் அறையில் பரபரப்பாக நின்றிருந்தனர்.
இதையடுத்து எனது தந்தை அவர்களை பார்த்து, ‘யார் நீங்கள்? என்ன வேண்டும் உங்களுக்கு?’, என்று கேட்டார். அதற்கு அவர்கள் எதுவும் சொல்லவில்லை. இதனால் வீட்டுக்கு வந்தவர்கள் கொள்ளையர்கள் என நினைத்து நாங்கள் கற்களால் தாக்க ஆரம்பித்தோம்.
அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவர் எனது தந்தையை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். ஆனால் அந்த அறையில் போதிய வெளிச்சம் இல்லாததால் அந்த குண்டு குறி தவறி, அந்த கூட்டத்தில் இருந்தவர் மீதே பாய்ந்தது.
குண்டு பாய்ந்த நபர் தரையில் சரிந்தார். இந்தநிலையில் நாதுராம் மற்றும் அவரது நண்பரும் கழிவறையில் உள்ள ஜன்னல் வழியாக தப்பித்ததாக அறிந்தோம். இந்த சம்பவம் நடந்து முடிந்த பின்னரே, வந்திருந்தவர்கள் தனிப்படை போலீசார் என்பது தெரியவந்தது. அந்த நாளை எங்களால் மறக்கவே முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தேஜாராமின் மகன் பிரகாஷ் சவுத்ரி கூறுகையில், “கொள்ளையர்கள் என நினைத்து எங்கள் குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் தமிழக போலீசாரை தாக்கினோம். அப்போது எனது தந்தையுடன், பெரியபாண்டியன் கடுமையாக மோதிக்கொண்டு இருந்தார். இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக அக்கூட்டத்தில் இருந்தவர் வைத்திருந்த துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியேறி பெரியபாண்டியன் உயிரிழந்தார். அவர்கள் போலீசார் என்பது எங்களுக்கு தெரியாது. கொள்ளையர்கள் என்று நினைத்துதான் தாக்கினோம்”, என்றார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் துப்பாக்கி சூட்டில் பலியான விவகாரத்தில், தேஜாராமின் பிள்ளைகள் தெரிவித்த கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a comment