வத்தளையில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கு அமைச்சர் ஜோன் இனவாதத்தைத் தூண்டியவர்

318 0

fd57893e38e20a534a95ea9fdd15cef5_XL-1வத்தளை ஒளியமுல்லப் பிரதேசத்தில் தமிழ் பாடசாலை திட்டத்திற்கு எதிராக அன்று அமைச்சர் ஜோன் அவர்கள் சிங்கள கத்தோலிக்க இனவாதத்தை கிளப்பினார்கள். இன்று சிங்கள பெளத்த இனவாதம் இவர்கள் மீது பாய்கிறது. இதுதான் உண்மை. இது இவர்கள் விதைத்த வினை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு விவேகானந்தாக் கல்லூரியில் நடைபெற்ற நடமாடும்சேவை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த வருடம் பெப்ரவரி மாதம் 13ம் திகதி அடிக்கல்லை நாட்டி வத்தளை தமிழ் பாடசாலை கட்டுமானத்தை எமது நல்லாட்சியில் ஆரம்பிக்க நாம் முடிவு செய்து இருந்தோம். இது மாகாணசபை பாடசாலை என்ற காரணத்தால் மேல்மாகாணசபை முதலமைச்சர் தலைமையில், எனது அழைப்பின் பேரில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, அமைச்சர் ஜோன் அமரதுங்க, அனைத்து கட்சி எம்பீக்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோரை அழைத்து அடிக்கல் நிகழ்வை விமர்சையாக நடத்த இருந்தோம். ஆனால், அந்த நிகழ்வை அமைச்சர் அமரதுங்க அரசியல் நோக்கில் தடுத்து நிறுத்தினார். நாட்டின் மிகப்பெரும் தலைவர்கள் கலந்துக்கொள்ளும் நிகழ்வாக இருந்தால் இனவாதிகள் ஓடி ஒளிவார்கள் என எனக்கு தெரியும். ஆனால், அது ஜோன் அமரதுங்கவுக்கு தெரியவில்லையா அல்லது தமிழ் பாடசாலை கட்டுவதில் அவருக்கு உண்மையிலேயே அக்கறை இல்லையா என எனக்கு விளங்கவில்லை.

நானும் அரசியல் நோக்கில் சண்டையிட்டு இருக்கலாம். நான் நினைத்து இருந்தால், ஓளியமுல்லைக்கு வந்து, ஒரு குழியை தோண்டி, நானும் ஒரு அடிக்கல்லை நாட்டி இருக்கலாம். நான் ஒரு கபினட் அமைச்சர். எந்த ஒரு கொம்பனும் என்னை தடுக்க முடியாது. எனினும் நானும் முதிர்ச்சியற்ற ஒரு சிறு குழந்தையை போல் நடந்துக்கொள்ள விரும்பவில்லை. ஜோன் அமரதுங்கவைவிட எனக்கு அரசியல் முதிர்ச்சி உள்ளது. தமிழ் பாடசாலை வத்தளையில் வேண்டும் என்பதுவே எனது நோக்கம்.

உண்மையில், பெப்ரவரி மாதம் அடிக்கல் நாட்ட முயன்ற எனது முயற்சியின் காரணமாக ஏற்பட்ட பெரும் அரசியல் அழுத்தம் ஏற்பட்டது. அதன் காரணமாகத்தான், 40 வருடமாக தூக்கத்தில் இருந்த அமைச்சர் ஜோன் அமரதுங்க விழித்து எழுந்து இன்று தமிழ் பாடசாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த உண்மை வத்தளையில் வாழும் சிறு குழந்தைக்கும் தெரியும். இதையிட்டு மிக மகிழ்ச்சியடைகிறேன். பாடசாலையை எவர் கட்டினாலும், ஏழை தமிழ் மக்கள் என்னை வாழ்த்துவார்கள் என்பது எனக்கு தெரியும். எனவே பாடசாலை கட்டி முடிக்கப்படும் வரை, நான் இவர்களை சும்மா இருக்க விட மாட்டேன் என வத்தளை வாழ் தமிழ் மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

வத்தளையில் தமிழ் பாடசாலை அமைக்க கடும் முயற்சி எடுக்கும் எனக்கு அழைப்பு விடுக்காமல் இந்த விழாவை ஜோன் அமாதுங்க நடத்தியுள்ளார். அதையிட்டு நான் கவலைப்படவில்லை. ஆனால், தன்னை அண்டி இருக்கும் ஒருசில அரசியல் சிறுவர்களையும், எங்கள் கட்சியில் இருந்து விரட்டப்பட்ட கையாலாகாத ஒருசிலரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு, இந்த அடிக்கல் நாட்டு விழாவை நடத்த ஜோன் அமரதுங்க முயன்றுள்ளார். இதனாலேயே இனவாதிகள் தமிழ் பாடசாலை திட்டத்தை தடுக்க முயல்கிறார்கள். உண்மையில் இந்த காரியத்தை நாம் அனைவரும் சேர்ந்து அரசியல் பலத்துடன் செய்ய வேண்டும். இனவாதிகளிடம் நாம் சரணடைய முடியாது. இதுபற்றி பிரதமரிடம் நான் உடனடியாக முறையிட்டுள்ளேன். பிரதமர் ஜோன் அமரதுங்கவிடம் விசாரித்துள்ளார். இனிமேல் இந்த இனவாதிகளை சமாளித்து பாடசாலையை கட்டி தருவது ஜோன் அமரதுங்கவின் கடமை எனவும் தெரிவித்தார்.