‘ஈழம்’ என்பது பற்றி தலைவர் பிரபாகரன் நன்று அறிந்து வைத்திருக்கிறார்! – உதய கம்மன்பில

380 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இருந்த பகுத்தறிவாற்றல் நன்று கற்றறிந்தவரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இல்லை என்று தென்னிலங்கையின் பேரினவாதக் கட்சியாக அறியப்படும் பிவித்துரு ஹெல உறுமய விமர்சித்துள்ளது.

ஸ்ரீலங்கா ஒரு சிங்கள தேசம் என்பதை வடமாகாண முதலமைச்சர் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் பிவித்துரு ஹெல உறுமய மேலும் கூறியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “கடந்த வாரம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விசித்திரமான கதையொன்றை தெரிவித்திருக்கின்றார். ஸ்ரீலங்கா நாடு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும், தேவநம்பிய திஸ்ஸ மன்னர், ஒரு தமிழர், எனவே இந்த நாடு பண்டைய காலத்தில் ஈழம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு மக்கள் நாட்டை ஈழம் என்றே அழைத்தனர். ஆனால் ஈழம் என்ற பதத்தின் அர்த்தத்தை விக்னேஸ்வரன் அறிந்திருக்கிறாரா? மெட்ராஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ்லெக்ஸிகன் என்று கூறப்படும் தமிழ் மொழிபெயர்ப்பின் படி ஈழம் என்பதை சிங்களத்தில் சீளம் என்றும், அதாவது சிங்கள மக்களின் நாடு என்றும் அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்களே என்ற பதம் சீலம் என்றும் பிற்காலத்தில் ஈழம் என்றும் அறியப்பட்டது. ஆகவே ஈழம் என்பது சிங்களவர்களின் நாடு. கற்றவர் என்று கூறப்படும் விக்னேஸ்வரன், தமிழ்லெக்ஸிகனை அறிந்து வைத்திருக்காவிட்டாலும், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அதுபற்றி நன்று அறிந்து வைத்திருக்கிறார்.

போராட்டத்தின்போது அவர் ஈழம் என்றல்லாமல் தமிழீழத்திற்காகவே போராடுவதாக அறிவித்திருந்தார். ஈழம் என்பது ஸ்ரீலங்கா, தமிழீழம் என்பது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக என்று புலிகள் இயக்கம் அறிந்திருந்தது. எது எவ்வாறாயினும் ஈழம் என்று கூறி வடமாகாண முதலமைச்சர் இந்த நாட்டை சிங்கள நாடு என்று ஏற்றுக்கொண்டதையிட்டு மகிழ்வடைகின்றோம்” என்றார்.

Leave a comment