கொக்குதீவு பறவைகள் சரணாலயம் இனந்தெரியாத விசமிகளினால் தீமூட்டி எரிப்பு!

268 0

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் கொக்குதீவு பறவைகள் சரணாலயம் இனந்தெரியாத விசமிகளினால் தீமூட்டி எரிக்கப்பட்டுள்ளது. குறித்த சரணாலயம் அதிகளவிலான அரிய வகை வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும் இடமாக விளங்குகின்றது.

இன்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட முகத்துவாரம், பாலமீன்மடு கடற்கரையை அண்மித்த பகுதியில் குறித்த சரணாலயம் அமைந்துள்ளது. கொக்குத் தீவு என அழைக்கப்பட்டும் இந்த பறவைகள் சரணாலயமே இவ்வாறு தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளது.

தீவுப்பகுதியான குறித்த சரணாலயத்தில் தீ பற்றி எரிந்ததை அவதானித்த அப்பகுதி மக்கள், லைட் ஹவுஸ் கழக உறுப்பினர்களுக்கு உடனடியாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவம் குறித்து கழக உறுப்பினர்களினால் பாலமீன்மடு பொலிஸ் காவலரண் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் தீவுப் பகுதிக்கு சென்ற அனைவரும் தீயினை அணைத்து நிலைமையினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எவ்வாறெனினும் குறித்த தீவில் பறவைக் கூடுகள் பல காணப்பட்டுள்ள நிலையில் அவற்றோடு அவற்றில் இருந்த குஞ்சுகளும் முட்டைகளும் எரிந்து கருகியுள்ளன. அரிய வகையான வெளிநாட்டுப் பறவைகள் வந்துசெல்லும் முக்கிய சரணாலயமாக குறித்த கொக்குத்தீவு பகுதி காணப்பட்ட நிலையில் இந்த நாசகாரச் சம்பவம் இடம்பெற்றதாக பிரதேச மக்கள் அங்கலாய்த்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு காவல் துறையினர் தீவிர விசாரணைகளினை மேற்கொண்டுள்ளனர்.

Leave a comment