சிங்கள குடியேற்றதிட்டங்கள் மற்றும் பௌத்தமயமாக்கல்கள் மீண்டும் அம்பலம்!

484 0

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளப்பகுதியை சிங்கள மயமாக்குவதில் இலங்கை படைகள் மற்றும் காவல்துறை முக்கிய பங்கை ஆற்ற தொடங்கியுள்ளன. முற்றுமுழுதாக தமிழ் மக்களிற்கு சொந்தமான தண்ணிமுறிப்பு குளப்பகுதியில் தற்போது வெலிஓயா பகுதியில் குடியேறியுள்ள சிங்களவர்கள் மீன்பிடியில் ஈடுபட பங்கு கோரிவருகின்றனர்.இதனால் தமிழ் சிங்கள தமிழ் மீனவர்களிடையே மோதல்கள் நடந்துவருகின்றது.

தமிழ் மீனவர்களது வலைகளை அறுத்தெறிவது தீக்கிரையாக்குவது தொடர்கின்றது.அத்துடன் தமிழ் மீனவர் ஒருவரது கட்டுமரமும் இரவுவேளை தீக்கிரையாக்கப்பட்ட சம்பவமும் அண்மையில் நடந்திருந்தது.

இந்நிலையினில் தண்ணீர் முறிப்பு குளத்தில் சிங்கள மீனவர்கள் தமக்கும் தொழிலில் ஈடுபட அனுமதிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும் அக்கோரிக்கையை அரச அதிபர் அடியோடு நிராகரித்திருந்தார்.

இருப்பினும் சிங்கள மீனவர்கள் இரானுவ பாதுகாப்புடன் அக் குளத்தில் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களுக்கு இடையில் முறுகல் நிலை தொடர்ந்துவருகின்றது.

இந்நிலையிலேயே சிங்கள மீனவர்களை பாதுகாக்க தண்ணீர் முறிப்பு குளப் பகுதியில் அரச காணியான நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணியை ஆக்கிரமித்து இராணுவம் முகாம் அமைத்து . நிலைகொண்டுள்ளது.அத்துடன் குளத்தில் அத்துமீறி தொழிலில் ஈடுபடும் சிங்கள மீனவர்களுக்கு பாதுகாப்பு வளங்கும் வகையில் செயற்பட்டும் வருகின்றது.

அத்துடன் அங்கு காவல்துறையையும் கடமைக்கு அமர்த்தியுள்ளதுடன் புதிய இராணுவ காவலரண்களையும் அமைத்துவருகின்றது.

இந்நிலையிலேயே இது தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவம், பொலிஸால் சுற்றிவளைக்கப்பட்டு அரை மணித்தியாலங்களுக்கு மேல் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இராணுவ பாதுகாப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் சிங்கள மயமாக்கல் தொடர்பில் ஊடகவியலாளர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் பின்னர் படையினரால் அழிக்கப்பட்டுமிருந்தது.

இதேவேளை அவ்வாறான சம்பவம் நடைபெறவில்லையென இராணுவ பேச்சாளர் தற்போது மறுதலித்துமுள்ளார்.

வன்னியில் படைமுகாம்களை பேணுவதன் மூலம் இலங்கை அரசு மேற்கொண்டுவரும் சிங்கள குடியேற்றதிட்டங்கள் மற்றும் பௌத்தமயமாக்கல்கள் மீண்டும் அம்பலமாகியுள்ளது.

Leave a comment