மண்ணுறங்கும் மாவீரத்தை சாட்சியாக்கி இடித்துரைக்கப்பட்டிருக்கும் சுதந்திர தமிழீழ பிரகடனம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

390 0

December 05. 2017
Norway

இந்த ஆண்டிற்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் குறிப்பாக தாயகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள் மூலம் மண்ணுறங்கும் மாவீரத்தை சாட்சியாக்கி சுதந்திர தமிழீழ பிரகடனம் இடித்துரைக்கப்பட்டுள்ளது.

நவம்பர்-26 மற்றும் நவம்பர்-27 ஆகிய இரு நாட்களும் நேர் முரண் நிலைகொண்ட எழுச்சி நாட்களாக உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் ஆயுத மௌனிப்பின் பின்னர் மெல்ல மெல்ல சோபை இழக்கும் நிலையேற்பட்டிருந்தது. இராணுவ அச்சுறுத்தல் மற்றும் முள்ளிவாய்க்கால் பேரழிவு ஏற்படுத்திய உளச்சோர்வு போன்ற காரணங்களால் தாயகத்தில் தமிழீழ எழுச்சி நாள் நினைவகூரல்கள் களையிழந்து காணப்பட்டது.

நவம்பர்-27 என்பது மாவீரர்களை நினைத்து மலர்தூவி சுடரேற்றி கண்ணீர்விட்டு கதறியழும் சாதாரண நாள் அல்ல. எங்கள் இனம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உயரிய இலட்சியம் சுமந்து தம்முயிர் ஈந்த மாவீரர்கள் மரணத்தையே வென்றவர்கள். அவர்கள் நினைவுகளை நெஞ்சிலேந்தி நினைவெழுச்சி கொள்வதன் மூலம் விதை குழிக்குள் விழி மூடித் துயில்கின்ற வீரவேங்கைகளின் இலட்சியம் உயிர்பிக்கப்படுகிறது.

வரிப்புலிகள் சேனையின் தாரக மந்திரமான சுதந்திர தமிழீழம் என்ற இலட்சிய தாகம் கண்ணீரால் ஆராதனை செய்யப்பட்டு வலுவேற்றப்படும் அதிமுக்கிய நாளே நவம்பர்-27 ஆகும். சுதந்திர தமிழீழ விடுதலைக்காய் களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களை பயங்கரவாதிகளாகவும் எமது போராட்டத்தை பயங்கரவாதமாகவும் சிங்கள பௌத்த பேரினவாத அரசு சித்தரித்து நிற்கின்றது. அதனை பிராந்திய உலக வல்லரசு நாடுகளும் தமது பிராந்திய நலன்களை முன்னிறுத்தி நியாய தர்மத்திற்கு அப்பாற்பட்டு ஏற்று ஆதரித்து நிற்கின்றன. இவர்கள் ஒருபக்கம் என்றால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் தமது சுயநலனிற்காக அதனை ஏற்று ஆராதிப்பது மாபெருந் துரோகமாகும்.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஆப்புவைக்கும் விதமாக கொண்டுவரப்பட்டிருக்கும் அரசியலமைப்பு இடைக்கால வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் கண்மூடித்தனமாக ஆதரித்து நிற்கும் முக்கிய தருணத்தில் தாயக மக்கள் அதனை மறுதலித்து தமது தீர்ப்பினை ஈகைச்சுடர் ஒளியில் உலகறியச் செய்துள்ளார்கள்.

தமிழர்களின் மரபுவழித் தாயகமான வடக்கு கிழக்கு பகுதியெங்கிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் கொண்டாடப்பட்டுள்ளது. ஆயுத மௌனிப்பின் பின் ஓய்ந்து போயிருந்த நிலையில் யாருடைய தூண்டுதலோ வற்புறுத்தலோ இன்றி தன்னெழுச்சியாக பேரெழுச்சியுடன் இம்முறை மாவீரர் நாள் நிகழ்வுகள் தாயகத் தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டுள்ள பின்னணியில் நவம்பர்-27 மாலை 6.05 மணிக்கு தமிழீழம் தன்னை மீள் பிரகடனம் செய்துகொண்ட அற்புதம் அரங்கேறியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவராக விளங்கிய கேணல் கிட்டு அவர்கள் தொன்னூறுகளின் முற்பகுதியில் சர்வதேச ஊடகவியலாளர்கள் தமிழீழத்தின் எல்லை குறித்து எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பாதிலளித்திருந்தார். இலங்கை வான்படை விமானங்கள் வீசும் குண்டுகள் எங்கெங்கு விழுந்து வெடிக்கின்றன, பீரங்கிக் குண்டுகள் எங்கெங்கு வீழ்ந்து வெடிக்கின்றன என்பதை இலங்கை வரைபடத்தில் குறித்துவைத்து அந்த புள்ளிகளை இணைத்துப்பார்த்தால் தெரிவதுதான் தமிழீழம் என்று பதிலளித்திருந்தார் கேணல் கிட்டு அவர்கள்.

அவ்வாறு நவம்பர்-27 அன்று மாலை 6.06 இற்கு தமிழீழ தேசமெங்கிலும் சுடர்விட்டெரிந்த ஈகைச் சுடர்களின் ஒளிப்பிரவாகத்தில் சுதந்திர தமிழீழம் மிளிர்ந்தது. இருபதிற்கும் மேற்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் கூடிய பல்லாயிரக்கணக்கிலான தமிழர்கள் ஒன்று கூடி சுதந்திர தமிழீழ பிரகடனத்தை இடித்துரைத்துள்ளார்கள்.

ஆம், இனவழிப்பு இராணுவத்தினால் இடித்தழிக்கப்பட்டு புதர்மண்டிப் போயிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்து தமது உறவுகளை விதைத்த அதே இடத்தில் ஒன்றுகூடி வணக்கம் செலுத்தியதன் மூலம் விடுதலைப் புலிகளாகவே மாவீரர்கள் நினைவுகூறப்பட்டுள்ளார்கள். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளின் காவல்தெய்வங்களாக என்றென்றும் மாவீரர்களே திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதன் மீள் வாசிப்பாகவே துயிலுமில்லங்களில் ஒன்று திரண்ட மக்கள் திரட்சி அமைந்துள்ளது.

சலுகைகளுக்காக உரிமைகளை விட்டுக்கொடுத்து நடைபிணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் சக தாயக உறவுகளுக்கும், அடிபணிவு அரசியல் மூலம் இனத்தின் தன்னுரிமையை சிங்கள பௌத்த பேரினவாத பேய்களிடம் அடமானம் வைக்கத்துடிக்கும் சம்பந்தன்-சுமந்திரன் களுக்கும், வார்த்தை ஜாலங்களுடன் அடிமை சாசனத்தை தமிழர்கள் மீது திணிக்க முயலும் சிங்கள பௌத்த பேரினவாத அரசிற்கும், அரசியல், பொருளாதார நலன்களை முன்னிறுத்தி இனவழிப்பு அரசை பாவமன்னிப்பு கொடுத்து பிணையெடுக்க முனையும் பிராந்திய உலக நாடுகளுக்கும் மற்றும் தடை செய்யப்பட்டிருக்கும் புலிக்கொடியையும் தேசியத் தலைவர் படத்தையும் முற்றிலும் தவிர்த்து கழுவிற நீரில் நழுவிற மீனாய் தப்பிக்க முயலும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களுக்கும் நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல் தாயகத் தமிழர்களின் நவம்பர்-27 எழுச்சி அமைந்துள்ளது.

சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு அச்சுறுத்தல் மற்றும் ஆட்சி மாற்றமோ அரசியல் சூழல் மாற்றமோ ஏற்படின் ஏற்படும் அச்சுறுத்தல் நிலை என எதைப்பற்றியும் கவலைகொள்ளாது இலட்சிய வேங்கைகள் துயில்கொள்ளும் மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கிச் சென்ற பல்லாயிரக்கணக்கிலான தாயக உறவுகள் அனைவருக்கும் சொல்லி நிற்பது ஒன்றே ஒன்றுதான்.

தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை உள்ளடக்கிய தமிழர்களின் அரசியல் அபிலாசைகளின் வழியேயான சுதந்திர தமிழீழம் ஒன்றே இறுதியானதும் உறுதியானதுமான தீர்வாகும் என்பதை மண்ணுறங்கும் மாவீரத்தின் சாட்சியாக எமது மக்கள் இடித்துரைத்துள்ளார்கள்.

தமிழ் தலைவர்கள் அரை குறைத் தீர்வைத் தமிழ் மக்கள் மீது திணித்து விடுவார்களோ என்று அஞ்சியே மாவீரர் நாள் நினைவேந்தலை தமிழ் மக்கள் எழுச்சியுடன் கடைப்பிடித்துள்ளார்கள் என வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேசுவரன் அவர்கள் கூறியிருப்பதானது, இவ் யதார்த்த புறநிலையை அவர் நன்கு உணர்ந்துள்ளதன் வெளிப்பாடேயாகும்.
அன்பான மக்களே! தாயக விடுதலைக்கான போராட்டத்தில் அளவுகடந்த இழப்புகளையும், தியாகங்களையும் விதைத்து நிற்கின்றோம். அவை வீண் போவதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. நாம் தாமதிக்கும் அல்லது தயங்கும் கணப்பொழுதில் எமது தலையெழுத்தை அடுத்தவர் தீர்மானிக்கும் பேராபத்து எம்மை சூழ்ந்துள்ளது. இலட்சியம் ஈடேறும் இறுதித்தருணம் இது. ஒரே கொள்கையில் ஒன்றுபட்ட மக்களாய் ஒன்றிணைவதன் மூலமே எமது வாழ்வையும் எதிர்கால சந்ததியின் இருப்பினையும் உறுதிசெய்ய முடியும்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Leave a comment