தஞ்சாவூரில் இன்று முதல்வர் பழனிசாமி திறப்பதாக இருந்த ரயில்வே மேம்பாலத்தை திறக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்தது.
தஞ்சாவூரைச் சேர்ந்த நீலகண்டன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தஞ்சாவூர் சந்தப்பிள்ளை பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பாலத்தின் நடுவில் நவ. 6-ல் பெரிய விரிசல் ஏற்பட்டது. பாலத்தை விரைவில் திறக்க வேண்டும் என்பதற்காக ஜல்லித்தூள் மற்றும் தார் கலவையைக் கொட்டி அவசரமாக அந்த விரிசல் சரி செய்யப்பட்டது. பாலம் முறையாக மறு கட்டமைப்பு செய்யப்படாவிட்டால் விபத்துகள் நடந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. பாலத்தை வலுப்படுத்த உத்தரவிட வேண்டும். அதுவரை பாலத்தை திறக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஜெ.நிஷாபானு அமர்வில் விசாரணைக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்து முறையான அனுமதி பெற்ற பிறகே, பாலத்தை திறக்க வேண்டும். பாலத்தை திறக்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த மனு தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
தஞ்சாவூரில் இன்று நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் முதல்வர் பழனிசாமி, ரயில்வே பாலத்தை திறப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

