சசிகலாவை சந்தித்த பிறகு ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் இன்று அறிவிப்பு: தனிக்கொடி பயன்படுத்துவதற்கு அவசியம் இல்லை என தினகரன் தகவல்

377 0

சசிகலாவை இன்று சந்தித்த பிறகு ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளரை அறிவிக்க உள்ளதாக டிடிவி தினகரன் கூறினார்.

திருச்சி தனியார் ஹோட்டலில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எப்படி களப் பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினோம்.

கட்சியின் பொதுச் செயலாளரை நாளை (நவ.29) சந்தித்த பிறகு, அன்று மாலை ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளரை அறிவிப்போம்.

சட்டப் போராட்டம்

திருச்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக கொடியை நாங்கள் பயன்படுத்தவில்லை. தேர்தல் ஆணையத்தின் 87 பக்க தீர்ப்பில் கட்சிக் கொடியை பற்றியோ, அலுவலகத்தைப் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு இறுதித் தீர்ப்பு அல்ல. சட்டப் போராட்டம் நடத்தி இரட்டை இலை சின்னத்தையும், கட்சியையும் மீட்போம்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் தொப்பி சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பிப்போம். ஆனால், அந்தச் சின்னத்தைக் கொடுக்கக் கூடாது என்று தமிழ்நாட்டு பாஜக தேர்தல் ஆணையத்தினர் கூறி வருகின்றனர்.

தனிக்கட்சி எண்ணமில்லை

இடைத்தேர்தலில் தனிக் கொடி பயன்படுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் பாரபட்சமான தீர்ப்பு கொடுத்துள்ளனர். இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம். இடைத்தேர்தல் முடியும் வரை வருமான வரித்துறை சோதனைகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும்.

தனிக் கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. அதிமுக எங்கள் இயக்கம். இரட்டை இலை எங்கள் உரிமை. எங்கள் அணியில் உள்ள எம்எல்ஏக்கள் சிலர் அணி தாவ உள்ளதாக வந்த தகவல் உண்மையல்ல.

அதிமுக அணிகள் பிரிந்து தேர்தலில் போட்டியிடுவது திமுகவுக்கு சாதகம் இல்லை. இடைத்தேர்தலில் எங்களுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி. இந்தத் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்றார்.

தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பன், மனோகரன், சீனிவாசன், ராஜசேகரன், சாருபாலா உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

Leave a comment