இலங்கைத் தொழிலாளர்களின் பங்களிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது

577 0

“ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கின்ற, இலங்கை தொழிலாளர்களின் பங்களிப்பு, தமது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது” என, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் ஸைத் அல் நஹியான் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் ஸைத் அல் நஹியான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி மாளிகையில் வைத்து கடந்த சனிக்கிழமை (18) சந்தித்தார்.   இந்தச் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாரென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான தொடர்புகளின் ஊடாக, அண்மைக்காலத்தில் துரித வளர்ச்சி ஏற்பட்டுள்ளதென, ஜனாதிபதி தனது மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதேவேளை, இரு நாட்டு உறவுகளுக்கும் பாரிய சக்தியாக விளங்கும் ஐக்கிய அரபு தேசத்தில் வசிக்கும் 125,000 இலங்கைத் தொழிலாளர்களின் பங்களிப்பு தமது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது” என்று. வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் ஸைத் அல் நஹியான் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்களது அந்த பங்களிப்பு எமது நாட்டுக்கும், அந்நிய செலாவணியைப் பெற்றுக்கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகின்றதென ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகளையும் முதலீடுகளையும் மேம்படுத்துதல் தொடர்பாகவும் சுற்றாடல், ஹொட்டல் வர்த்தகத்துறை, நிதி நிறுவனங்கள் முதலியவற்றுக்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

துபாய் நகரத்திலிருந்து கிழக்கு திசையில் அமைந்துள்ள மிகவும் பலமானதொரு நிதி மையமாக கொழும்பு நகரத்தை மாற்றியமைப்பதற்கான செயற்பாடுகள் தற்போது இலங்கையில் மேற்கொள்ளப்படுவதாகவும் அதன்பொருட்டு பிரதான நிதியியல் கேந்திர நிலையமாக விளங்கும் துபாய் நகரிலிருந்து அதிகளவான ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில், அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, சரத் அமுனுகம ஆகியோரும் இரு நாடுகளினதும் தூதுவர்கள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Leave a comment