வடமாகாண சபையில் சில மாதங்களாக தடைபட்டுக்கொண்டு இருந்த பிரேரணை சபைக்கு கொண்டுவரப்பட்டு இடைநடுவில் வாபஸ் பெறப்பட்டது.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே உறுப்பினர் ஒருவர் பிரேரணை முன் மொழிந்து கருத்து தெரிவித்துக் கொண்டு இருந்த வேளை ஏனைய உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பினால் பிரேரணை இடைநடுவில் வாபஸ் பெறப்பட்டது.
வடமாகாண விவசாய அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள திணைக்களங்கள் என்பவற்றில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளது என கடந்த பெப்ரவரி மாதம் 9ம் திகதி ஆளும் கட்சி உறுப்பினர் ஜீ.ரீ.லிங்கநாதன் குற்றச்சாட்டு ஒன்றினை முன் வைத்து பிரேரணை ஒன்றினை சபையில் முன் மொழிந்தார்.
குறித்த பிரேரணை முன்மொழியப்பட்டு, நீண்ட காலமாகியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் , கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மற்றுமொரு ஆளும் கட்சி உறுப்பினரான பரம்சோதி , விவசாய அமைச்சு மற்றும் திணைக்களங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெரிவுக்குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரி பிரேரணை ஒன்றினை சபையில் கொண்டு வர முயன்றார்.
இருந்த போதிலும் பிரேரணை கொண்டுவரும் போது சபையில் முதலமைச்சர் இல்லை, விவசாய அமைச்சர் இல்லை, அல்லது இருவரும் சபையில் இல்லை என சில காரணங்கள் முன் வைக்கப்பட்டு குறித்த பிரேரணை சபையில் முன் மொழியப்படாமல் தள்ளிப்போடப்பட்டுக் கொண்டு இருந்தது.
இவ்வாறாக சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட அமர்வில் பிரேரணை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டு இருக்கும் பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் அது வாபஸ் பெறப்படும்.
இந்நிலையில் இன்றைய தினம் வடமாகாண விவசாய அமைச்சர் மற்றும் முதலமைச்சர் சபையில் இல்லாத நேரத்தில் குறித்த பிரேரணை சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதனை அடுத்து குறித்த பிரேரணையை முன் மொழிந்து ஆளும் கட்சி உறுப்பினர் பரம்சோதி உரையாற்றிக் கொண்டு இருந்தார். அந்த உரை 20 நிமிடங்களுக்கு மேலாக நீண்டு கொண்டே போனதால், ஒரு கட்டத்தில் உறுப்பினர் தியாகராஜா தேவையற்ற பிரேரணையை சபையில் முன் மொழிந்து நேரத்தை வீணாக்கிக் கொண்டு இருக்கின்றார். இந்தப் பிரேரணை சபையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட போதிலும் அதனையும் மீறி சபைக்கு பிரேரணையை கொண்டு வந்து நேரத்தை வீணடிக்கின்றார் எனக் குற்றசாட்டை முன் வைத்தார்.
அதையடுத்து ஆளும் கட்சி உறுப்பினர் சிராய்வா தெரிவிக்கையில், அமைச்சர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவென முதலமைச்சரினால் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழு விவசாய அமைச்சு தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளும்.
அவ்வாறு விசாரணை மேற்கொள்ளும் குழுவிடம், விவசாய அமைச்சுக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள், முறைகேடுகள் தொடர்பில் சான்றுகள் ஆவணங்கள் இருந்தால் அவற்றை உறுப்பினர் அந்த குழுவிடம் ஒப்படைக்கலாம்.
முதலமைச்சரின் குழு விசாரணைகளை முன்னெடுக்க உள்ள நிலையில், இவ்வாறன பிரேரணை தேவையற்றது என தெரிவித்தார்.
இவ்வாறாக பல உறுப்பினர்கள், அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை செய்ய முதலமைச்சர் குழு நியமித்த பின்னரும், இந்த பிரேரணை தேவையற்றது என தமது கருத்துக்களை முன் வைத்தனர்.
அதனையடுத்து ஆளும் கட்சி உறுப்பினர் பரம்சோதி தெரிவிக்கையில் ,
ஏனைய உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டது இணங்க விவசாய அமைச்சுக்கு எதிராக என்னிடம் உள்ள சான்றுகள் ஆவணத்தை முதலமைச்சரின் குழுவிடம் கையளிப்பேன். என தெரிவித்து தனது பிரேரணையை வாபஸ் பெற்றுக் கொண்டார்.