200 ஏக்கர் நில மோசடி

4949 0

அக்கராயன் கரும்புத் தோட்ட காணி முன்னர் குத்தகைக்குப் பெற்ற நிறுவனத்தின் முகாமையாளரான கோபாலபிள்ளை லண்டனில் உள்ள ஒருவருக்கு குறித்த 200 ஏக்கர் நிலத்தை முன்பே ஒரு கோடியே 50 லட்சம் ரூபாவிற்கு விற்றவர்களே தற்போது உரிமை கொண்டாடுகின்றனர் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை தெரிவித்தார்.

அக்கராயன் பிரதேசத்தில் உள்ள கரும்புத் தோட்ட 200 ஏக்கர் காணி தொடர்பில் சபையில் பிரசன்னம் அற்ற நிலையில் விவாதிக்கப்பட்டமையானால் அதன் விளக்கமாக  முதலமைச்சரால் அனுப்பப்பட்ட கடிதம் சபையில்  வாசிக்கப்பட்டதனையடுத்தே உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,

1965ம் ஆண்டில் கரும்புச் செய்கைக்காக வழங்கப்பட்ட குறித்த 200 ஏக்கரை குறித்த நிறுவனம் அப்போதே விற்றிருந்த நிலையில் அதனை பகிர்ந்து குத்தகைக்கும் வழங்கப்பட்டிருந்த்து. இவ்வாறு குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலத்தில் 184 தென்னம்பிள்ளைகளும் நாட்டப்பட்டிருந்த நிலையில் தற்போதும் 84 தென்னம்பிள்ளைகள் உள்ளன. முதலமைச்சர் இது ஓர் முதலீடு என்கின்றார். அந்த 200 ஏக்கரில் எத்தனை கோடி ரூபா முதலீடு செய்கின்றனர்.

அந்த நிலையில் இவ்வாறான ஒரு நிறுவனத்திற்கு நிலத்தை வழங்குவதனை விட 200 குடும்பங்களிற்கு அந்த நிலத்தினை வழங்கும்போது அந்த 200 குடும்பங்களும் மாகாண சபையினை வாழ்த்துவார்கள். என்றார்.

இதன்போது கருத்துரைத்த உறுப்பினர் அ.பரஞ்சோதி ,

குறித்த நிலத்தினை பெற்ற நிறுவனம் சீனி உற்பத்தி நிறுவனம் என பதிவு இருக்கும் நிலையில் அவர்கள் எவ்வாறு மாடு வளர்க்க முடியும். இங்கே நோக்கமே மாறி விட்டது. எனச் சுட்டிக்காட்டினார்.

இதேநேரம் முதலமைச்சர் தான் சபையில் இல்லாத நேரம் இவ் விடயம் விவாதித்தாக சுட்டிக்காட்டினார். அவ்வாறானால் முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ இச் சபையில் இல்லாத நேரம் எந்த விடயமும் விவாதிக்க முடியாதா? என கேள்வி எழுப்பியதோடு கிளிநொச்சியில் போரால் பாதித்த அக்கராயனைச் சேர்ந்த 200 குடும்பங்களிற்கான வாழ்வாதாரத்திற்காக அந்த கரும்புத் தோட்டம் இயங்கிய பகுதியினைக் கோருகின்றனர். இந்த நிலையில் மாகாண சபையானது செல்வந்தர்களிற்காக செயல்படுவதா ? அல்லது பாமரர்களிற்காக நிற்பதா ? என்பதனை கருத்தில் கொண்டு இவ்விடயத்தினை முதலமைச்சர் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட உறுப்பினரும் முன்னாள் கல்வி அமைச்சருமான த.குருகுலராயா கோரிக்கை விடுத்தார்.

இதன்போது தற்போதைய கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் கருத்துரைக்கையில் ,

கிளிநொச்சியிலும் சரி வேறு மாவட்டத்திலும் சரி பல்லாயிரக்கணக்கானோர் காணி அற்ற நிலையில் உள்ளனர். ஏன் அந்த காணியை மட்டும் கோருகின்றனர். கிளிநொச்சியிலேயே பல காணிகள் உண்டு அதனால் இவ் விடயம் இங்கே பிழையான வழிக்கு திருப்பப்படுகின்றதா என வினாவினார்.

இதன்போது மீண்டும் உறுப்பினர் பசுபதிப்பிள்ளை கருத்துரைக்பையில் ,

அந்த மாவட்டத்தில் பல்லாயிரக் கணக்கானோர் காணி அற்று உள்ளனர்தான் ஆனால் அக்கராயன் கரும்முத் தோட்டப் பகுதியினை வேறு பிரதேசத்தவர்கள் போரவில்லை அதனைச் சூழ 1952ம் ஆண்டு முதல் குடியிருக்கும் நிலமற்ற மக்களிற்காகவே கோரப்படுகின்றது. என்றார். –

இதன்போது பதிலளித்து உரையாற்றிய முதலமைச்சர் இங்கே எழுப்பப்பட்ட அத்தனை கேள்விகளையும் வழங்கினால் அதற்கான பதிலளிக்கப்படும் அதன் அடிப்படையில் இறுதி முடிவினை எட்டலாம். என்றார்

Leave a comment