நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாளை 9ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு –செலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்காது என்றும் வாகனங்களின் விலைகளில் மாற்றம் வரும் என்றும் நிதியமைச்சு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
மேலும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் முதலீடு செய்வோருக்கு 200வீத வரிச்சலுகையை தொடர்ந்தும் உயர்ந்த மட்டத்தில் முன்னெடுப்பதற்கும் மலைகயத்தில் வீடமைப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தவும் அடுத்த வருடத்திற்கான வரவு, செலவுத்திட்டத்தில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு, செலவுத்திட்டம் நாளை வியாழக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பகல் 1 மணியலிருந்து மாலை 4 மணிவரை வரவு, செலவுத்திட்ட உரை நிதி அமைச்சரினால் வாசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் இம்முறை வரவு, செலவுத்திட்டமானது பச்சை நீல எண்ணக்கருவை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
அதாவது பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்பும்போது சுற்றாடலை பாதுகாக்கவேண்டியதை பச்சை என்ற எண்ணக்கருவின் ஊடாகவும், கடல் சார் பொருளாதாரத்தை முன்னேற்றுவதை நீல என்ற கருவூடாகவும் இம்முறை வரவு, செலவுத்திட்டத்தில் உட்படுத்தியுள்ளதாக நிதி அமைச்சின தகவல் தெரிவிக்கின்றன.
இதேவேளை சிறிய அளவிலான வாகனங்களின் விலைகளில் மாற்றம் இருக்காது என்றும் எனினும் பெரியளவிலான வாகனங்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதுமட்டுமன்றி மாணவர்களுக்கான 13 வருட கட்டாயக்கல்வி நடைமுறை இம்முறை வரவு, செலவுத்திட்டத்தின் ஊடாக ஒரு யோசனையாக முன்வைக்கப்படவுள்ளது. அத்துடன் எரிபொருள் விலையில் எவ்விதமான மாற்றமும் இம்முறை வரவு, செலவுத்திட்டத்தில் இருக்காது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மதுபான விலைகளிலும் பாரிய அளவு மாற்றம் இருக்காது என அறியமுடிகின்றது.
அத்துடன் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு இம்முறை வரவு, செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது. காரணம் புதிய நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததும் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்ததால் எனவே அடுத்த வருடமும் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படமாட்டாது என்றும் தெரியவருகிறது.
மேலும் தனியார் துறையினரின் சம்பள உயர்வு தொடர்பிலும் எந்தவிதமான யோசனைகளும் இடம்பெற மாட்டாது என்றே நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களுக்கான யோசனைகள் முன்வைக்கப்படலாம் என தெரியவருகிறது.
அதாவது வடக்கு, கிழக்கில் முதலீடு செய்பவர்களுக்கு 200 வீத வரிச்சலுகையை வழங்குவதற்கான கடந்த வருட யோசனை இம்முறையும் மிகவும் வலுவான முறையில் முன்வைக்கப்படுமென தெரியவருகிறது.
இது இவ்வாறிருக்க மலையகத்தில் வீட்டுப்பிரச்சினை பாரிய விவகாரமாக உருவெடுத்துள்ள நிலையில் மிக விரைவாக பெருந்தோட்டங்களில் தனிவீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான யோசனைகளும் இம்முறை வரவு,செலவுத்திட்டத்தில் இடம்பெறும் என நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மிகப்பெரிய அளவில் இம்முறை நிவாரணங்கள் எதுவும் வரவு, செலவுத்திட்டத்தில் இடம்பெறாது என்றும் மக்களின் முயற்சிகளுக்கு ஊக்குவிப்பு வழங்குவதற்கான யோசனைகளே இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கக்கூடியதும் மற்றும் நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டதாக அடுத்த வரவு செலவுத்திட்டம் அமையும் என நிதி அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் கேசரிக்க தெரிவித்தார்.

