கிழக்கு மாகாண கல்வி முன்னேற்றத்தை மத்திய கல்வி அமைச்சு பாழ்படுத்துகிறதா? – கிழக்கின் முன்னாள் முதல்வர் கேள்வி

330 0

கிழக்கு மாகாணத்தின் கல்வித்துறை முன்னேற்றத்தை பாழ்படுத்துவதற்கு  மத்திய கல்வியமைச்சு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றதா என்ற சந்தேகம் தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமத் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் பட்டதாரிகளின் பெற்றோருடனான சந்திப்பு ஏறாவூரில் உள்ள முன்னாள் முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றபோது இந்த விடயத்தை அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கல்வித்துறை வீழ்ச்சிக்கு  ஆசிரியர் பற்றாக்குறை பிரதான பிரச்சினையாக உள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பயிற்றப்பட்ட ஆசிரியர்களை மத்திய கல்வி அமைச்சு வெளிமாகாணங்களுக்கு நியமிக்கின்றமையானது கிழக்கு மாகாணத்துக்கு  மத்திய கல்வியமைச்சு செய்கின்ற புறக்கணிப்பாகவே கருத வேண்டியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் காணப்பட்ட 5021  ஆசிரியர் வெற்றிடங்களை  சுட்டிக்காட்டி 1700 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்குவதற்கான அனுமதியையும் அதற்குரிய நிதியையும் நாம் மாகாண சபையை நிருவகித்தபோது கொண்டு வந்து சேர்த்திருந்தோம்.

அத்தோடு  மட்டும் நின்றுவிடாமல் 2015 மற்றும் 2016 ஆண்டுகளில்  நாம் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களை  கிழக்கு  மாகாணத்திலேயே  நியமிக்கவேண்டும்   என்பதற்கான  அழுத்தங்களை  மத்திய அரசிற்குக் கொடுத்து போராட்டங்ளையும் முன்னெடுத்து அவர்களுக்கு கிழக்கு மாகாணத்திலேயே நியமனங்ளைப் பெற்றுக்கொடுத்தோம்,
ஆனால்  இம்முறை  கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள்  வெளி  மாகாணங்களின் தூரப் பிரதேசங்களில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்,
இவர்களின் துன்பத்திற்கு தற்போதைய கிழக்கு மாகாணத்தின் மொத்த  அதிகாரங்களையும்  தம் வசம் வைத்திருக்கின்ற  ஆளுநர் பதில் சொல்ல வேண்டிய  கடமை  இருக்கின்றது,
அது  மாத்திரமன்றி  அன்று  எமது  மாகாண சபை  மீது  பல்வேறு  குற்றச்சாட்டுக்களை  முன்வைத்த மட்டக்களப்பு  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்பொழுது எங்கே தலைமறைவாகி விட்டார்கள் என்ற கேள்வியும் மக்களால் எழுப்பப்படுகின்றது.

அப்பொழுது நாடாளுமன்றத்தில்  எம்மை விமர்சிப்பதற்கும், நகர சபையில்  பணிபுரியும் ஊழியர்கள்  குறித்தும்  கேள்வியெழுப்ப நேரம் இருந்த  பிரதேச அரசியல்வாதிகளுக்கு இந்தக் கல்வியியல்  கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினை  குறித்து பேசுவதற்கு நேரம் கிடைக்கவில்லை போலும்,
சிறுபான்மைச்  சமூகத்துக்கு பாதகமான மாகாண  சபைத் தேர்தல்  திருத்தச்  சட்டத்தினால் எமக்கு பாதிப்புள்ளது என நன்கு தெரிந்திருந்தும் அதற்கு ஆதரவு தெரிவித்ததோடு சமூகத்தின் பிரச்சினை தொடர்பிலேயே பேச முடியாத  நீங்கள் எப்படி கல்வியல்  கல்லூரி  ஆசிரியர்களின்  பிரச்சினைக்கு  தீர்வைக்  கோரி  நாடாளுமன்றத்தில் பேசப் போகின்றீர்கள்.

இதனை மக்களும் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

Leave a comment