31 அமைச்சர்களும் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரண பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த 1 வாரமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. மழை தொடர்ந்து நீடிக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மதுராந்தகம் ஏரி உள்பட பல்வேறு ஏரிகள் நிரம்பி விட்டது. கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், நன்மங்கலம், நாராயணபுரம் ஏரிகள் நிரம்பி வழிவதால் ஊருக்குள் தண்ணீர் புகுந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தான் கனமழையால் பொது மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முடிச்சூர், கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, ஆதனூர், பொழிச்சலூர் உள்பட ஏராளமான பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. அமைச்சர்களும், அதிகாரிகளும் வெள்ளப் பகுதிகளுக்கு சென்று மழை நீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்று பார்வையிட்டார்.
வடசென்னை பகுதியை பார்வையிட்ட பிறகு சென்னை வழியாக தாம்பரம், முடிச்சூர், பள்ளிக்கரணை பகுதிகளையும் பார்வையிட்டு நிவாரண பணிகளை முடிக்கி விட்டார்.
அதுமட்டுமின்றி 31 அமைச்சர்களையும் களத்தில் இறக்கி மக்களுக்கு உதவுமாறு அறிவுறுத்தினார்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும், காஞ்சீபுரத்துக்கும் 31 அமைச்சர்களையும் பொறுப்பாளர்களாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதையடுத்து அனைத்து அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தினமும் வடசென்னை, தென் சென்னைக்கு சென்று வருவதுடன் கட்டுப்பாட்டு அறைக்கும் சென்று அவ்வப்போது நிலவரங்களை கேட்டறிந்து தகுந்த உத்தரவுகளை பிறப்பித்து நிவாரண பணிகளில் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர்.

மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கொட்டும் மழையிலும் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற ஊழியர்களுடன் பணியாற்றி வருகிறார். சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரை வடிய வைக்க அனைத்து முயற்சிகளையும் மேற் கொண்டார்.
அதுமட்டுமின்றி நிவாரன முகாம்களுக்கும் சென்று உணவு கூடங்களில் தேவையான வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்.
அண்ணாநகரில் திண்டுக்கல் சீனிவாசன், மணிகண்டன், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதியில் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், வளர்மதி, மணலி புதுநகர், மாதவரத்தில் அமைச்சர் சி.வி. சண்முகம், வேளச்சேரியில் நிலோபர் கபில், செங்குன்றத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ராஜலட்சுமி, ராயபுரம், திரு.வி.க.நகரில் அமைச்சர் ஜெயக்குமார், எம்.சி.சம்பத், ஆர்.கே.நகர் தொகுதியில் செல்லூர் ராஜூ, எம்.ஆர். விஜயபாஸ்கர், அம்பத்தூர் , கொரட்டூரில் ஓ.எஸ்.மணியன், பாண்டியராஜன், ஓட்டேரியில் கடம்பூர் ராஜூ, கே.சி.கருப்பணன் ஆகியோர் வீதி வீதியாக நடந்து சென்று பணிகளை முடுக்கிவிட்டனர்.
மீன்வளத்துறை அமைச்சர் பி.தங்மணி, மின்வாரிய அதிகாரிகளுடன் ஒவ்வொரு ஏரியாவுக்கும் சென்று மின் வயர்கள் பாதுகாப்பாக தண்ணீர் புகாத வண்ணம் உள்ளதா? என்றும் கண்காணிக்கிறார்.

அமைச்சர் ஆர்.காமராஜ் திருவள்ளுவர் நகர், புத்தகரம் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை முடுக்கிவிட்டார்.
உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் காஞ்சீபுரம் மாவட்ட பொறுப்பாளராக உள்ளதால் அவர் தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், பெரும்பாக்கம், ஆதனூர், வண்டலூர், செங்கல்பட்டு பகுதிகளில் தண்ணீரில் மிதக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று மழைநீரை வடிய வைக்க பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
அமைச்சர் கே.பி.அன்பழகனுடன் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா, மாவட்ட கலெக்டர் பொன்னையா, போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரும் இரவு-பகலாக பணியாற்றி மக்களுக்காக பாடுபடுகின்றனர்.
அனைத்து அமைச்சர்களும் மழை பாதிப்பு பகுதிகளில் பணியாற்றி வருவதை பலதரப்பட்ட மக்களும் வரவேற்கிறார்கள்.

