சென்னை-புறநகரில் மழை வெள்ளம் வடிகிறது: நிவாரண பணிகள் தீவிரம்

433 0

சென்னை-புறநகரில் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளில் இருந்தவர்களுக்கு நிவாரணப் பணிகளை தீவிரபடுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கியது.

அன்று தொடங்கி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த 2-ந்தேதி வியாழக்கிழமை இரவு மிக பலத்த மழை பெய்தது.

தொடர் மழை காரணமாக சென்னை, புறநகர் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்குள் மழை தண்ணீர் புகுந்தது. மழைநீர் வடிய போதிய வசதிகள் செய்யப்படாததால் முக்கிய சாலைகள், தெருக்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏராளமான குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கிறது.

வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் இரவு- பகலாக போராடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். ஆனால் விட்டு, விட்டு மழை பெய்வதால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை அகற்றுவது அதிகாரிகளுக்கு மிகப் பெரும் சவாலாக உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் தென்மேற்கே வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது. நேற்று அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தெற்கு ஆந்திர கடற்கரை வரை நீண்டு நிலை கொண்டிருந்தது. மற்றொரு பக்கத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நீடித்தப்படி உள்ளது.

இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த சீசனில் புதிய சாதனை ஏற்படுத்தும் வகையில் மழை பெய்துள்ளது. பொதுவாக அக்டோபர் 1-ந்தேதி முதல் நவம்பர் 4-ந்தேதி வரை சராசரி மழை அளவு 320 மி.மீட்டராக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு இந்த சீசனில் 620 மி.மீ. மழை பெய்துள்ளது.

இதன்மூலம் இந்த சீசனில் 93 சதவீதம் அதிக மழை பெய்து இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரட்டிப்பு மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இது வரை 10 சதவீதம் ஏரி, குளங் களே முழுமையாக நிரம்பி உள்ளன. இதில் குடியிருப்பு பகுதிகள் அருகே உள்ள ஏரிகள் நிரம்பியதால் உபரி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

அந்த உபரி தண்ணீர் பல குடியிருப்பு வீடுகளுக்குள் புகுந்து வெள்ளக்காடாகி விட்டது. சில குடியிருப்பு பகுதிகளில் ஏரியின் உபரி தண்ணீர் வருகை காரணமாக ஏற்கனவே தேங்கியுள்ள மழை தண்ணீர் வடியாமல் அப்படியே உள்ளது.

இத்தகைய காரணங்களால் கடந்த 4 நாட்களாக சென்னை புறநகர் பகுதிகளில் பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மிதந்தபடி உள்ளன.இந்த நிலையில் வீடுகளுக்குள் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும், பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளில் இருந்தவர்களுக்கு நிவாரணப் பணிகள் செய்யவும் முன்னுரிமை கொடுத்து அதிகாரிகள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அமைச்சர்களின் நேரடி கண்காணிப்பில் மழைநீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மண்டலம் வாரியாக வெள்ள நிவாரணப் பணிகளை மேற் கொண்டுள்ளனர்.

மழை மேலும் 2 நாட்கள் நீடிக்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து, வெள்ள நிவாரணப் பணிகளை தீவிரமாக செய்ய மேலும் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மழை பாதிப்புப் பகுதிகளில் தண்ணீரை அகற்றும் பணி தீவிரமாகியுள்ளது.

இந்த நிலையில் நேற்றிரவும் கனமழை பெய்து விடுமோ என்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டவர்களிடம் பயமும், பீதியும் நிலவியது. சனிக்கிழமை இரவும் மழை பெய்தால் வீடுகளுக்குள் தேங்கி நிற்கும் தண்ணீரின் அளவு மேலும் உயரக்கூடும் என்று பயப்பட்டனர். ஆனால் அவர்கள் சற்று நிம்மதி அடையும் வகையில் நேற்றிரவு சென்னையில் கனமழை பெய்யவில்லை.

நேற்று பகலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஆங்காங்கே விட்டு, விட்டு மழை பெய்தது. பெரும்பாலான நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவும் அதே நிலை நீடித்தது. இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் வீடுகளுக்குள் தேங்கி நின்ற தண்ணீர் இன்று அதிகாலை முதல் வடியத் தொடங்கியது.

இன்று காலை சென்னையில் லேசான வெயில் அடித்தது. சிறிது நேரத்தில் வானம் இருட்டானது. ஆனால் பலத்த மழை பெய்யவில்லை. இதன் காரணமாக ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி தண்ணீரும் இன்று காலை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

அடுத்த இரு தினங்களுக்கு இதே நிலை நீடித்தால் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தில் மிதக்கும் வீடுகளுக்கு சற்று விடிவு கிடைக்கும். தற்போது வெள்ளம் வடிந்து கொண்டிருப்பதால், மக்களி டம் சற்று பயம் நீங்கியுள்ளது. இதை பயன்படுத்தி அதிகம் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகர முக்கிய சாலைகள் அனைத்தும் இன்று காலை துடைத்து வைத்தது போல “பளிச்” சென்று காணப்பட்டது. தாழ்வான தெருக்களில் இருந்த தண்ணீரும் அகற்றப்பட்டுவிட்டது. தண்ணீரை அகற்ற ஜே.சி.பி. எந்திரங்களால் தோண்டப்பட்ட பள்ளங்கள் இன்று சாலையோரங்களில் தெரிந்தன.

அந்த பள்ளங்களில் பொதுமக்கள் விழுந்து விடக் கூடாது என்பதற்காக ஆங்காங்கே அவற்றை நிரப்பும் பணிகளில் போலீசாரே ஈடுபட்டனர். கட்டிட இடி பாடு கழிவுகளை கொண்டு வந்து அந்த பள்ளங்களை நிரப்பி சரி செய்தனர்.

சென்னையில் மொத்தம் 18 சுரங்கப்பாதைகள் உள்ளன. தொடர் மழை காரணமாக இந்த சுரங்கப்பாதைகளில் வியாசர்பாடி ஜீவா சுரங்கப் பாதை, பெரம்பூர் ரெயில்வே சுரங்கப்பாதை, சேத்துப்பட்டு கெங்குரெட்டி சுரங்கப் பாதை உள்பட 4 சுரங்கப் பாதைகள் தண்ணீரில் மூழ்கி இருந்தன.

இன்று அந்த சுரங்கப் பாதைகளில் இருந்து முழுமையாக தண்ணீர் அகற்றப்பட்டு விட்டது. இதனால் அந்த சுரங்கப்பாதைகளில் இன்று காலை முதல் வழக்கமான போக்குவரத்து தொடங்கியது.

புரசைவாக்கம் ரித்தர்டன் சாலையில் பெரிய அளவில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதிகரிகள் விடிய, விடிய மோட்டார் பம்ப் மூலம் அந்த தண்ணீரை அகற்றி விட்டனர். தியாகராயநகர், சைதாப்பேட்டை, பரங்கிமலை, பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளிலும் முக்கிய சாலைகளில் இருந்த தண்ணீர் உடனுக்குடன் அகற்றப்பட்டு விட்டது.

இதனால் சென்னை மாநகர சாலைகளில் இன்று தங்கு தடையின்றி போக்கு வரத்து நடந்தது.

இந்த நிலையில் இன்னும் 3 நாட்களில் மழை படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே சமயத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அந்தமான் அருகே புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்தமும் தமிழக கடலோர மாவட்ட மக்களுக்கு அதிக மழையை பெற்றுத் தரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அப்போது கனமழை பெய்தால் மீண்டும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க கூடும். ஆனால் அதை நினைத்து மக்கள் பயப்பட தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அந்த குறைந்த காற்றழுத்தம் தீவிரமாக வாய்ப்பு இல்லை என்று கணிக்கப்பட்டுள்ளது.

 

Leave a comment