தேர்தல் அறிவிப்புக்கு கல்முனையிலிருந்து புதிய தடங்கல்

269 0

உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்கு மற்றுமொரு புதிய தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளுராட்சி சபைத் தேர்தலை அறிவிப்பதற்கு முன்னர் கல்முனை மாநகர சபையை நான்கு பிரிவுகளாக பிரித்து பிரதேச சபைகளை உருவாக்குமாறு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல கட்சியொன்று வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால் தேர்தலை பிரகடனம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் தாமதமடையலாம் எனவும் கூறப்படுகின்றது.

கல்முனை மாநகர சபையை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை சாய்ந்தமருது பிரதேச சபை எனப் பெயரிடுவதற்கு, இதற்கு முன்னர் பிரதமருக்கும் அப்பிரதேச அரசியல் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உடன்பாடு காணப்பட்டிருந்தது.

இருப்பினும், திடீரென அங்குள்ள ஒரு கட்சியானது, நான்கு பிரதேச சபைகளாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் விடுத்துள்ளது.

இந்த தீர்மானத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விருப்பம் தெரிவிக்க வில்லையெனவும் கூறப்படுகின்றது.

இந்த விடயம் குறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் இதில், நான்காகப் பிரிக்க அரசாங்கம் உடன்பட்டால், உள்ளுராட்சி சபைத் தேர்தலை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு இன்னும் தாமதம் ஏற்படும் எனவும் அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி இன்றைய தேசிய சகோதார நாளிதழொன்று அறிவித்துள்ளது.

Leave a comment