மீண்டும் மாயமான்(கள்) – ஜுட் பிரகாஷ்

288 0

எண்பதுகளின் நடுப் பகுதியில், ரஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக பதவியேற்று, இலங்கைப் பிரச்சினையில், இந்திரா காந்தியின் அணுகுமுறையில் இருந்து விலகி நடந்து கொண்டிருந்த காலம். இலங்கை அரசையும் தமிழ் இயக்கங்களையும்  இணக்கத்திற்கு கொண்டு வர இந்தியா பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்த கால கட்டம்.  இந்தப் பின்னனியில் தான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினர் “மாயமான்” எனும் தெருக்கூத்தை அரங்கேற்றினார்கள்.

பின்னேரங்களிலும் இரவுகளிலும் யாழ்ப்பாணம் எங்கும் ஊர் சந்திகளில் அரங்கேறிய “மாயமான்” தெருக்கூத்தில் வரும் பாடல்களில் ஒன்று, இன்று மீண்டும் ஒரு தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் நினைவில் வந்தது.

“தென்னாசியாவின்
மன்னாதி மன்னர் நான்
ஏனென்று கேட்காமல்
என் பின்னால் வாருங்கள்”

என்ற பாடலை பாடிக் கொண்டு ரஜீவ் கதாபாத்திரம் முன்னே போக, தென்னாசியாவின் குட்டி நாடுகள் அவர் பின்னால் போவதைப் போன்று அந்தக் காட்சி அமையும். ரஜீவ் காந்தியை குறித்து எழுதப்பட்ட இந்த வரிகள், ரஜீவ் கொடுக்க விரும்பிய தீர்வுப் பொதியை பற்றியதாகவும் இருந்திருக்கலாம்.

——————————

தமிழீழம் என்பது தமிழர்களின் கனவு. அந்தக் கனவு முள்ளிவாய்க்காலோடு யதார்த்த ரீதியில் முற்றுப் பெற்றாலும், நாங்கள் சாகும் வரை அந்தக் கனவு எங்கள் கண்களிற்குள் ஒட்டிக் கொண்டு தானிருக்கும். நனவாகாத அந்தக் கனவு எங்களுக்குள் உறங்கு நிலையில் இருக்கும் போது எந்தவொரு தீர்வுத் திட்டமும் எங்களிற்கு திருப்தி தராது.

தமிழ் தலைமைகளோடு ஏற்படுத்திய ஒப்பந்தங்களை சிங்களத் தலைமைகள் மீறிய வரலாறே 1977ல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கும் ஆயுதப் போராட்டத்திற்கும் வித்திட்டது. தனித் தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் உச்சம் பெறத் தொடங்க, கிடைத்த இடைக்காலத் தீர்வுகளை தமிழர் தரப்பு நிராகரிப்பதும் எட்டப்பட்ட உடன்படிக்கைகளிற்கு நீதிமன்றங்கள் முட்டுக்கட்டை போடுவதும்  வரலாறாகத் தொடங்கியது.

இப்போது 2017ல் மீண்டும் ஒரு அரை குறைத் தீர்வாக இடைக்கால அறிக்கை எனும் பெயரில் வந்திருக்கும் புதிய அரசியல் யாப்பிற்கான சிபாரிசுகளையும் நிராகரிக்க எங்களை நாங்கள் தயார்படுத்தத் தொடங்கிவிட்டோம். அன்றும் இன்றும் நிராகரிக்க நாங்கள் கூறும் காரணங்கள் மிக வலுவானவை, எங்களைப் பொறுத்தவரை வலு நியாயமானவை. மற்றப் பக்கத்தில் சிங்கள பேரினவாதிகளும் தங்களது எதிர்ப்பு ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள்.

“மச்சான், நாளைக்கு சிங்களவனே மனம் மாறி எங்களிற்கு தமிழீழம் தந்தாலும், நாங்கள் சிலாபத்தில் இருக்கும் தென் தமிழீழ எல்லையை வெள்ளவத்தை மட்டும் நீட்டாட்டி எங்களிற்கு தமிழீழம் வேண்டாம் என்று சொல்லுவமடா” என்று நண்பன் ஒருவன் பகிடியாய் சொன்னதிலும் ஒரு தார்ப்பரியம் இருக்கிறதா?

போரில் தோற்ற நாங்கள் தான் இறங்கிப் போக வேண்டும் என்ற வாதம் சரணாகதிக்கு சமானம் இல்லையா? சரி இறங்கிப்போவதுதான் என முடிவெடுத்தால் எவ்வளவு தூரம் இறங்கலாம் என்பதற்கும் ஓரு எல்லையுண்டல்லவா?  அந்த எல்லை எதுவரை என்பதை எப்படி தீர்மானிப்பது ? இறங்கிப்போனால் அப்படியே மூழ்கிப்போய்விடுவோம் என்பவர்களுக்கான பதில் தான் என்ன?

1987லிருந்து தரப்பட்ட தீர்வுகளை நிராகரிக்க நிராகரிக்க, அடுத்து வந்த தீர்வுகள் தேய்ந்து கொண்டு போனது தான் வரலாற்று உண்மை என்று அண்மையில் மெல்பேர்ண் வந்த அமைச்சர் மனோ கணேசன் சொன்ன கருத்து நியாமானதா?  நாங்கள் விரும்பும் தீர்வும்  ஒரு மாயமானா?

—————-

தீர்வுத் திட்டங்களின் உள்ளடக்கம் மட்டுமா தேய்ந்தது? யுத்தம் எங்களை விரட்ட, நாங்கள் தென்னிலங்கைக்கும் வெளிநாடுகளிற்கும் புலம்பெயர, தாயகப் பகுதிகளில் எங்கள் சனத்தொகை தேயத் தொடங்கியது. எங்களது சனத்தொகை குறைவதும், ஒரு வகையில் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களிற்கு வழி விடுவதாகவே அமைகிறது.

கல்வியில், 1990களின் ஆரம்பத்தில் முதல் மூன்று மாவட்டங்களில் இடம்பிடித்த யாழ்ப்பாண மாவட்டம், 2016ல் 21வது இடத்திற்கு தள்ளப்பட்டதும் இந்த காலகட்டத்தில் தான். 1980களில் இலங்கையின் பொருளாதாரத்திற்கு 25 சதவீதத்திற்கு பங்களிப்பு வழங்கிய வடக்கு-கிழக்கு மாகாணங்களின் பொருளாதார பங்களிப்பு, 2016ல் 6 சதவீதத்திற்கு சரிந்ததும் இதே கால கட்டத்தில் தான்.

நாங்கள் அரசியல் உரிமைகளை வெல்வதில் மட்டும் குறியாக இருக்க, இலங்கையின் பிற சமூகங்கள் தங்களை பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் வளப்படுத்திக் கொண்டு விட்டன என்ற கசப்பான உண்மை எமக்கு நன்கு தெரிந்தது தான். அந்த சமூகங்கள் பொருளாதார ரீதியாக அடைந்த முன்னேற்றங்கள் அவர்களை அரசியல்  ரீதியாகவும் பலப்படுத்தி விட்டன.

அரசியல் உரிமைகள் வெல்லும் வரை எங்கள் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்க நாங்கள் தொடர்ந்தும் மறுத்து வருவதும் ஏன்? அரசியல்-பொருளாதாரம் எனும் இரட்டை நோக்கங்களையும் சமாந்தரமாக கொண்டியக்கவல்ல கொள்கைகள் நமக்கு கசப்பதன் காரணம் தான் என்ன?

எங்களது அரசியல் உரிமைகள் நோக்கிய பயணத்தை திசை திருப்பவல்ல மாயமான் தான் சமூக-பொருளாதார அபிவிருத்தியா?

—————————

“ஐநா வரை எங்கட பிரச்சினை போயிருக்குடா. இப்ப போய் ஒரு அரை குறை தீர்வை ஏற்றுக் கொண்டோம் என்றால் அவ்வளவு தான். பிறகு எந்தக்காலத்திலும் எங்களால் அதிக அதிகாரமோ உரிமைகளோ கேட்க முடியாது, தம்பி” என்று அண்ணர் ஒருத்தர் விளக்கிய நியாயத்திலும் நியாயம் இருக்கிறது.

மே 2009ல் எங்களது ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதோடு, நாங்கள் எங்களை நம்பி,உயிரும்  ரத்தமும் உழைப்பும் வியர்வையும் பவுணும் பணமும் விதைத்து கட்டியெழுப்பிய மிகப்

பெரிய பேரம் பேசும் பலம் (bargain power), அழிந்து போனது. இப்போது சிங்கள அரசாங்கத்தை உருட்டி வெருட்டி மிரட்டி அதிக உரிமைகளை தர வைக்க எங்களிற்கிருக்கும் பேரம் பேசும் பலம் தான் என்ன? 225 பேரடங்கிய பாராளுமன்றத்தில் இருக்கும் எங்களது 15 பேரா? இலங்கையின் பொருளாதாரத்தை முடக்க முடியாத வடக்கின் கடையடைப்புக்களா?

2009ல் மனித பேரவலம் நடந்த போது அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் கனடாவிலும் ஐநாவிலும் தலைமைப் பதவிகளில் இருந்தவர்களால் தான், அதற்கு பிந்தைய ஆண்டுகளில் சர்வதேசத்தில் இலங்கை அரசிற்கு எதிராக மேற்கோள்ளப்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இன்று அவர்களின் ஆட்சிகளும் மாறி இலங்கையிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. அன்று இருந்த அதே ஓர்மத்துடன் சர்வதேசம் எங்களிற்காக களமிறங்கி எங்களது உரிமைகளை பெற்றுத் தரும் என்று இன்றும் நாங்கள் நம்பலாமா? சர்வதேச தலையீடு என்று நாங்கள் காலங்காலமாக எதிர்பார்த்து இருப்பதும் ஒரு மாயமானா?

———————-

நாங்கள் ஒரு பக்கம் இந்த மாயமான்களை துரத்திக் கொண்டு திரிய, போரின் காரணமாக புலம்பெயர்ந்து தங்களை பலப்படுத்திக் கொண்டு விடுதலைப் போராட்டத்திற்கும் பலம் சேர்த்த ஒரு தலைமுறை, “நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும்” என்ற இன்னும் நிறைவேறாத வேட்கையுடன் முதுமையை நோக்கியும் மரணத்தை நோக்கியும் பயணித்துக் கொண்டிருக்கிறது. 1950களிலும் 1960களிலும் பிறந்த இந்த தலைமுறை தான், போரால் அழிவுண்ட எங்கள் தேசத்தை மீள கட்டியெழுப்ப வேண்டிய நிபுணத்துவத்தையும் நிதிவளங்களையும் தம்மகத்தே கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் தேசத்தை ஆழமாக நேசிக்கும் இந்தத் தலைமுறைக்கு பின்னர் வரும் தலைமுறைகள் அவர்களிற்கிருக்கும் அதேயளவு பற்றுடன் தாயகத்திற்கு உதவி செய்யப் போவதில்லை.  தாயகத்தை நேசித்து புலம்பெயர் தேசத்தில் வாழும்  இந்த தேசப் பற்றாளர்களின் பலத்தை தாயக  சமூகத்தையும் பொருளாதாரத்தையும்

மீளவும் கட்டியெழுப்ப பயன்படுத்தப் போகிறோமா? இல்லை காலம் அவர்களையும் காவு கொள்ள விட்டு விடப்போகிறோமா? மாயாமான்களிடம் மீண்டும் ஏமாறப் போகிறோமா?

Leave a comment