தற்போதைய போராட்டங்கள் தேவையானவையா? – பி.மாணிக்கவாசகம்

472 0

அர­சியல் உரிமை சார்ந்த பிரச்­சி­னைகள் கார­ண­மா­கவே, இந்த நாட்டில் தமிழ் மக்கள் போரா­டு­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டார்கள். போராட்டம் என்­பது அவர்கள் விரும்பி ஏற்­றுக்­கொண்ட ஒரு விட­ய­மல்ல. நாட்டில் உள்ள சக இனத்­த­வர்­க­ளுடன் சம­நி­லை­யி­லான உரி­மை­க­ளோடு, ஐக்­கி­ய­மா­கவும், நல்­லி­ணக்­கத்­து­டனும் வாழ வேண்டும் என்­பதே அவர்­க­ளு­டைய ஆழ் மன விருப்­ப­மாகும்.

அர­சியல் உரிமை சார்ந்த பிரச்­சி­னை­க­ளா­யி­னும்­சரி, அத­னை­யொட்டி கிளை பரப்­பி­யுள்ள அடிப்­படை உரி­மைகள், அர­சியல் பிரச்­சி­னைகள், அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளா­யி­னும்­சரி, தமிழ் மக்கள் முகம் கொடுத்­துள்ள பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­ப­ட­வில்லை என்­பதே இந்த நாட்டின் அர­சியல் வர­லாறு.

மாறி மாறி ஆட்­சிக்கு வந்த பேரி­ன­வாத அர­சாங்­கங்கள், தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை அவர்­க­ளு­டைய அர­சியல் வெற்­றிக்கும், அர­சியல் இருப்­புக்கும், அதி­கார சுக­போ­கங்­க­ளுக்கும் மட்­டுமே பயன்­ப­டுத்திக் கொண்­டன. அந்த மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைத்து அவர்­க­ளுடன் நிரந்­த­ர­மான நல்­லி­ணக்­கத்­தோடு ஐக்­கி­ய­மாக வாழ்­வ­தற்கு இந்த அர­சாங்­கங்கள் இதய சுத்­தி­யுடன் முயற்­சிக்­க­வில்லை.

ஒரு கட்சி அர­சாங்­க­மா­கவும், மறு கட்சி எதிர்க்­கட்­சி­யா­கவும் மாறி மாறி செயற்­பட்டு வரு­கின்ற இரண்டு பிர­தான தேசிய அர­சியல் கட்­சி­க­ளுமே பேரி­ன­வா­தத்­திலும், அர­சியல் முலாம் பூசிய பௌத்த மத­மோ­கத்­திலும் மீள முடி­யாத வகையில் மூழ்­கி­யுள்­ளன. இதனால், இந்த நாட்டின் தேசிய சிறு­பான்மை இன மக்­க­ளு­டைய அர­சியல் உரி­மைகள், அர­சியல் நலன்கள், அர­சியல் ரீதி­யான பிரச்­சி­னைகள் என்­ப­வற்றை இன­வாத, மத­வாத கண்­ணோட்­டத்­து­ட­னேயே இந்­தக்­கட்­சிகள் நோக்கிச் செயற்­பட்டு வரு­கின்­றன.

செவிடன் காதில் ஊதிய சங்கு

ஒரு கட்சி ஆட்சி நடத்­தும்­போது, எதிர்க்­கட்­சி­யாக உள்ள மற்ற கட்சி, சிறு­பான்மை இன மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண மேற்­கொள்­கின்ற முயற்­சி­க­ளுக்கு இன­வா­தத்தைக் கிளப்பி முட்­டுக்­கட்டை போடு­வதை, இதன் கார­ண­மா­கவே வழ­மை­யான செயற்­பா­டாகக் காண முடி­கின்­றது.

எனினும், இரண்டு தேசிய அர­சியல் கட்­சி­களும் நல்­லாட்சி அர­சாங்கம் என்ற பெயரில் இணைந்து இப்­போ­தைய அர­சாங்­கத்தை அமைத்­தி­ருப்­பதன் மூலம், வழ­மை­யான தமது ஆட்சி முறை போக்கில் இருந்து வேறு­பட்­டி­ருக்­கின்­றன.

எதிரும், புதி­ரு­மான செயற்­பா­டு­களைக் கொண்ட இரண்டு கட்­சி­களும் இணைந்து ஆட்சி அமைத்­துள்­ளதன் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண முடியும், ஏனைய பிரச்­சி­னை­களையும் தீர்த்துக் கொள்ள முடியும் என்று நம்­பப்­பட்­டது. இரண்டு தேசிய அர­சியல் கட்­சி­களும் இணைந்து ஆட்சி அமைத்­தி­ருப்­பது, இதற்கு அர­சியல் ரீதி­யாகக் கிடைத்­துள்ள, கிடைத்­தற்­க­ரிய நல்­ல­தொரு வாய்ப்­பா­கவே கரு­தப்­பட்­டது.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன், இதில் மிக ஆழ­மான நம்­பிக்கை கொண்­டி­ருந்தார். அதன் கார­ண­மா­கவே, 2015 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அடுத்த வரு­டமே – 2016 ஆம் ஆண்டு இறு­திக்குள் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காணப்­படும் என்று வெளிப்­ப­டை­யாகக் கூறி­யி­ருந்தார். அது மட்­டு­மல்­லாமல், அந்த நம்­பிக்­கையை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளி­டத்­திலும், தமிழ் மக்கள் மத்­தி­யிலும் அர­சியல் ரீதி­யாக வேரூன்றச் செய்­தி­ருந்தார். ஆனால் 2016 ஆம் ஆண்டு கடந்து, 2017 ஆம் ஆண்டு முடிவை நெருங்­கி­யி­ருக்­கின்ற நிலை­யிலும், அந்த எதிர்­பார்ப்பு நிறை­வே­ற­வில்லை.

ஆனால் நல்­லாட்சி அர­சாங்­கத்தை அமைத்­துள்ள, எதிரும் புதி­ரு­மான போக்கைக் கொண்ட இரண்டு தேசிய கட்­சி­க­ளுமே, அர­சியல் தீர்வு உட்­பட பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் விட­யத்தில் அர­சியல் ரீதி­யாக உற்­சா­கத்தைக் காட்­ட­வில்லை. துடிப்­புடன் செயற்­ப­டு­வ­தற்கு முன்­வ­ர­வில்லை. மாறாக மந்த கதி­யி­லான போக்கே கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றது. இதனால், பாதிக்­கப்­பட்ட மக்­களின் பல்­வேறு வேதனை குரல்­களும், அந்த மக்­களின் நியா­ய­மான பல கோரிக்­கை­களும் செவிடன் காதில் ஊதிய சங்­கா­கவே இந்த இரண்டு கட்சி அர­சாங்­கத்­திடம் எதி­ரொ­லித்துக் கொண்­டி­ருக்­கின்­றன.

போராட்ட அர­சியல் போக்கு

இதனால் போரினால் பாதிக்­கப்­பட்ட மக்கள், பெரும் ஏமாற்­றத்­திற்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்­றார்கள். இந்த ஏமாற்­றமே, தாங்­களே உரு­வாக்­கிய அர­சாங்­கத்­திற்கு எதி­ராக வீதி­களில் இறங்கி போரா­டு­வ­தற்கு அவர்­களைத் தூண்­டி­யி­ருக்­கின்­றது. இரா­ணு­வத்தின் பிடியில் சிக்­கி­யுள்ள தமது சட்­ட­ரீ­தி­யான உரித்­து­டைய காணி­களை மீட்­ப­தற்­காக அவர்கள் வீதியில் இறங்­கி­யி­ருக்­கின்­றார்கள். அதே­போன்று காணாமல் ஆக்­கப்பட்டவர்­க­ளுக்கு பொறுப்பு கூறு­மாறு வலி­யு­றுத்தி மற்­று­மொரு போராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. நீண்­ட­கா­ல­மாக சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கான போராட்டம் இப்­போது வீச்­சுடன் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்தப் போராட்­டங்கள் அனைத்­திலும் ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட வழி­மு­றை­களைக் காண முடி­ய­வில்லை. அர­சியல் தலை­மை­களை எடுத்­தெ­றிந்­துள்ள பாதிக்­கப்­பட்ட மக்கள், தங்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தாங்­களே தீர்வு காண முற்­பட்­டுள்ள தீவி­ர­மா­னதோர் அர­சியல் போக்கே, இதில் வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் தலை­மை­யாகக் கரு­தப்­ப­டு­கின்ற போதிலும், மக்­க­ளு­டைய எரியும் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய வலு­வான செயன்­மு­றை­களை முன்­னெ­டுப்­ப­தி­லும்­பார்க்க, நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்குப் பாதிப்பு ஏற்­ப­டுத்­தி­விடக் கூடாது என்­ப­தி­லேயே அது, கண்ணும் கருத்­து­மாகச் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது.

நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு உறு­து­ணை­யாக இருந்து ஆத­ர­வ­ளிக்­கின்ற தலை­மையின் இந்தப் போக்கு, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­களை வெறுப்­ப­டையச் செய்­தி­ருக்­கின்­றது. அந்தக் கட்­சி­களில் ஒன்­றா­கிய ஈ,பி,­ஆர்­,எல்,எவ், மாத்­தி­ரமே அர­சியல் ரீதி­யான இந்தக் கசப்­பு­ணர்வை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றது. ஏனைய கட்­சிகள் பட்டும் படாத, தொட்டும் தொடாத ஒரு போக்கைக் கடைப்­பி­டித்து வரு­கின்­றன. கூட்­ட­மைப்பின் தலைமைக் கட்­சி­யா­கிய தமி­ழ­ர­சுக்­கட்­சியைச் சேர்ந்த முக்­கி­யஸ்­தர்கள் மத்­தி­யிலும் இந்த கசப்­பான உணர்வு காணப்­ப­டு­கின்ற போதிலும், தலை­மையின் சீற்­றத்­திற்கு அஞ்­சியும் தமது அர­சியல் எதிர்­கா­லத்தைக் கருத்திற் கொண்டும் அவர்கள் அதனை மென்று விழுங்கிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்த நிலை­மை­களின் அடிப்­ப­டை­யி­லேயே, தமிழ் மக்­க­ளுக்­கான ஒரு மாற்று அர­சியல் தலை­மைக்­கான சிந்­த­னையும், அதனைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களும் துளிர்­விட்­டி­ருக்­கின்­றன.

மாற்­றுத்­த­லை­மைக்­கான செயற்­பா­டுகள் ஒரு­பு­ற­மி­ருக்க, செயல்­வ­லி­மை­யற்ற அர­சியல் தலை­மைத்­து­வத்­தினால் ஏற்­பட்­டுள்ள வெற்­றி­டத்தை நிரப்­பு­வ­தற்கு சிவில் அமைப்­புக்­களும் பொது அமைப்­புக்­களும் முற்­பட்­டி­ருக்­கின்ற ஓர் அர­சியல் போக்கு தலை­யெ­டுத்­துள்­ளது. தாங்­களே தங்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு முற்­பட்­டுள்ள பாதிக்­கப்­பட்ட மக்­களின் போராட்­டத்­திற்கு இது வலு சேர்த்­தி­ருப்­ப­தையும் காண முடி­கின்­றது.

குறிப்­பாக வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் விசா­ரணை செய்­யப்­பட்டு வந்த மூன்று அர­சியல் கைதி­களின் வழக்­கு­களை அனு­ரா­த­ர­புரம் மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்­றிய சட்­டமா அதி­பரின் நட­வ­டிக்­கையை எதிர்த்து உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் குதித்­தி­ருந்த அர­சியல் கைதி­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்தும், தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதிகள் அனை­வ­ரையும் நிபந்­த­னை­யின்றி விடு­தலை செய்ய வேண்டும் என கோரியும் மாகாணம் தழு­விய அளவில் வடக்கில் நடத்­தப்­பட்ட கடை­ய­டைப்பு, அதனைத் தொடர்ந்து இடம்­பெற்ற கறுப்­புக்­கொடி போராட்­டமும், இந்த புதிய அர­சியல் போக்கை வெளிச்சம் போட்டு காட்­டி­யி­ருக்­கின்­றது.

அழுத்தம் கொடுப்­ப­தற்­கான போராட்டம்

அது மட்­டு­மல்­லாமல், அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­காக யாழ்ப்­பா­ணத்தில் நடத்­தப்­பட்ட கறுப்­புக்­கொடி போராட்டம், தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் போராட்ட வழி­மு­றைகள் குறித்து ஆழ்ந்து சிந்­திக்கத் தூண்­டி­யி­ருக்­கின்­றது.

அர­சியல் கைதி­களின் விடு­தலை

பொது­வாக அரச தலை­வ­ரா­கிய ஜனா­தி­ப­தியின் கைகளில் குறிப்­பாக அவ­ரு­டைய தீர்­மா­னத்­தி­லேயே தங்­கி­யி­ருப்­ப­தாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. நிறை­வேற்று அதி­காரம் கொண்­ட­வ­ரா­கிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால நினைத்தால், அர­சியல் கைதிகள் அனை­வ­ரையும் பொது­மன்­னிப்பு வழங்கி விடு­தலை செய்ய முடியும் என்­பது அநே­கரின் எதிர்­பார்ப்பு.

முன்­னைய அர­சாங்­கத்தில் அமைச்­ச­ராக இருந்­த­போது, தன்னைக் கொலை செய்­வ­தற்கு சதித்­திட்டம் தீட்­டினார் என்று சந்­தே­கத்­தின்­பேரில் கைது செய்­யப்­பட்­டி­ருந்த முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­ன­ரான சிவ­ராஜா ஜெனிபன் என்ற இளை­ஞனை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­தி­ருந்தார். ஜனா­தி­பதி பத­வியில் தனது ஒரு வருடப் பூர்த்­தியை முன்­னிட்டு இடம்­பெற்ற வைபவம் ஒன்றில் இந்த சம்­பவம் நடை­பெற்­றி­ருந்­தது.

அத்­துடன் முன்­னைய அர­சாங்­கத்தில் நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள ஜனா­தி­ப­தி­யாக இருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன இரா­ணு­வத்தின் பிடியில் இருந்த முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­க­ளான 12 ஆயிரம் பேரை மன்­னித்து, இரா­ணுவ புனர்­வாழ்வுப் பயிற்­சியின் பின்னர் விடு­தலை செய்­தி­ருந்தார். இவற்றை முன்­னு­தா­ர­ண­மாகக் கொண்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தற்­போது சிறைச்­சா­லை­களில் உள்ள 132 அர­சியல் கைதி­க­ளையும் விடு­தலை செய்ய வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தும் வகையில் அவ­ருக்கு எதி­ராகக் கறுப்­புக்­கொடி ஏந்தி யாழ்ப்­பா­ணத்தில் போராட்டம் நடத்­தப்­பட்­டது. இலங்கை தமிழ்­மொ­ழித்­தின விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்­வ­தற்­காக யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை தந்­த­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதி­ராக இந்த கறுப்­புக்­கொ­டி­களை ஏந்தி ஆர்ப்­பாட்டம் நடத்­தப்­பட்­டது. அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் அவ­ருக்கு அழுத்தம் கொடுப்­பதே இந்தப் போராட்­டத்தின் முக்­கிய நோக்கம்.

மன்னார் எச்­ச­ரிக்­கையும் யாழ்ப்­பாண போராட்­டமும்

இந்தப் போராட்­டத்­திற்கு முன்னர், மத நல்­லி­ணக்­கத்­திற்கு முர­ணான வகையில், மன்னார் திருக்­கே­தீஸ்­வரம் பகு­தியில் புதி­தாக அமைக்­கப்­பட்­டுள்ள பௌத்த விகா­ரையின் திறப்­பு­வி­ழா­வுக்கு வருகை தர­வி­ருந்த அவ­ரு­டைய விஜ­யத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்து கறுப்­புக்­கொடி ஏந்தி விழாவைப் பகிஷ்­க­ரித்து போராட்டம் நடத்­தப்­படும் என மன்னார் பொது அமைப்­புக்­களின் ஒன்­றியம் எச்­ச­ரிக்கை செய்­தி­ருந்­தது. அந்த ஒன்­றி­யத்தின் தலைவர் சிவ­கரன் இந்த எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்தார். ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அந்த நிகழ்­வுக்கு வருகை தர­வில்லை. அதனால் போராட்டம் நடை­பெ­ற­வில்லை.

இலங்­கையின் தமிழ்ப்­பி­ர­தே­சத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் விஜ­யத்­திற்கு கறுப்­புக்­கொடி ஏந்தி எதிர்ப்பு தெரி­விப்­பது என்­பது நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு உள்­ளு­ரிலும், சர்­வ­தேச அள­விலும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்றே பல­ராலும் கரு­தப்­பட்­டது. இத்­த­கைய எதிர்ப்­புக்கு அச்­ச­ம­டைந்­ததன் கார­ண­மா­கவே, மன்­னா­ருக்­கான ஜனா­தி­ப­தியின் விஜயம் இடம்­பெ­ற­வில்லை என்று அப்­போது பலரும் எண்­ணி­னார்கள். அதே­போன்று யாழ்ப்­பா­ணத்தில் ஏற்­பா­டா­கி­யி­ருந்த கறுப்­புக்­கொடி போராட்டம் கார­ண­மாக அவ­ரு­டைய விஜயம் இடம்­பெ­றாமல் போகலாம் என்ற எதிர்­பார்ப்பும் நில­வி­யது.

ஆனால், இந்த ஆர்ப்­பாட்­டத்­திற்கு எதி­ராக பொலிசார் நீதி­மன்­றத்தில் தடை­யுத்­த­ரவைப் பெற்­றி­ருந்த நிலையில், அந்த நிகழ்­வுக்கு ஜனா­தி­பதி வருகை தந்­தி­ருந்தார். திட்­ட­மிட்­ட­வாறு கறுப்­புக்­கொடி ஏந்­திய ஆர்ப்­பாட்­டமும் இடம்­பெற்­றது. ஆனால் இத்­த­கைய போராட்­டங்­க­ளின்­போது, அர­சி­யல்­வா­தி­க­ளும்­சரி முக்­கி­யஸ்­தர்­க­ளும் ­சரி, போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு முகம் கொடுக்­காமல் விலகிச் செல்­வதைப் போன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன யாழ்ப்­பாணப் போராட்­டத்தைப் புறக்­க­ணித்­து­விட்டுச் செல்­ல­வில்லை.

மாறாக தனது வாக­னத்தில் இருந்து இறங்கி, போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களை நாடிச் சென்று, என்ன பிரச்­சினை என்று வின­வினார். அந்த இடத்தில் போராட்­டத்தின் முன்­ன­ணியில் இருந்த வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம், ஈ.பி.­ஆர்­.எல்.எவ். கட்­சியின் தலை­வரும் முன்னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் உள்­ளிட்­ட­வர்கள் அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்கள். ஆனால் இந்த விடயம் குறித்து தெரி­யாத வகையில் தொனி செய்த அவர், அது­பற்றி பேச்­சுக்கள் நடத்­தலாம் வாருங்கள் என அழைப்பு விடுத்தார். ஆனால் அந்த அழைப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­க­ளினால் நிர­ாக­ரிக்­கப்­பட்­டது.

எச்­ச­ரிக்கை

இந்த நிகழ்வு குறித்து யாழ் இந்துக் கல்­லூ­ரியில் நடை­பெற்ற தமிழ்த்­தின விருது வழங்கும் விழாவில் குறிப்­பிட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, கறுப்­புக்­கொடி ஏந்­து­வதை விடுத்து, வெள்­ளைக்­கொ­டியை ஏந்­து­மாறு போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­க­ளுக்கு அறி­வு­றுத்தும் வகையில் கூறி­யி­ருந்தார். வன்­முறை வேண்டாம். சமா­தா­ன­மாகப் பேச்­சுக்­களை நடத்தி பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணலாம் என்­ப­தையும் அவர் அங்கு ஆற்­றிய உரை­யின்­போது குறிப்­பிட்­டி­ருந்தார். தமிழ் மக்­க­ளு­டைய வாக்குப் பலத்­தினால் பத­விக்கு வந்­துள்­ளதை நினை­வூட்­டிய அவர் தனது கரங்­களைப் பலப்­ப­டுத்த வேண்டும் என கேட்­டுக்­கொண்டார். அவ்­வாறு பலப்­ப­டுத்­தா­விட்டால், பேய்கள் தலையெ­டுத்­து­விடும் என்றும் அவர் எச்­ச­ரிக்கை செய்­தி­ருந்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்தப் போராட்­டத்தை எதிர்­கொண்ட விதம் குறித்து, பல்­வேறு வித­மான அர­சியல் வியாக்­கி­யா­னங்கள் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றன. இருந்­தாலும், கறுப்­புக்­கொடி போராட்­டத்தை துணிச்­ச­லோடு எதிர்­கொண்­டி­ருந்தார் என்­பதை எவரும் மறுக்க முடி­யாது. அதனை அவரும் அவரைச் சார்ந்­த­வர்­களும் தங்­க­ளு­டைய அர­சியல் நலன்­க­ளுக்­கான பிர­சா­ரங்­க­ளுக்குப் பயன்­ப­டுத்­து­வார்கள் என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை.

ஆனால், இத்­த­கைய போராட்­டங்கள் தங்­க­ளு­டைய அர­சியல் போக்கில் எந்­த­வி­த­மான மாற்­றங்­க­ளையும் கொண்டு வரப் போவ­தில்லை என்­பதை, தனது வாக­னத்தில் இருந்து இறங்கி வந்து போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களைச் சந்­தித்து, பேசலாம் வாருங்கள் என அழைப்பு விடுத்­ததன் மூலம் அவர் உறு­தி­யாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார்.

அத்­துடன் கறுப்­புக்­கொடி ஏந்­தா­தீர்கள். வெள்ளைக் கொடியை ஏந்­துங்கள். வன்­மு­றையைக் கைவி­டுங்கள். எனது கரங்­களைப் பலப்­ப­டுத்­துங்கள். இல்­லையேல் பேய்கள் பலம் பெற்­று­வி­டு­வார்கள் என கூறி­யதன் மூலம் அவர் பல விட­யங்­களைச் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இந்தக் கூற்று, முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­தன, அவ­ரு­டைய ஆட்சிக் காலத்தில் வன்­மு­றை­களில் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­வர்­களை நோக்கி, சமா­தானம் என்றால் சமா­தானம். போர் என்றால் போர் என கர்ச்­சனை செய்­தி­ருந்­ததை நினை­வூட்டச் செய்­தி­ருக்­கின்­றது.

வன்­மு­றையில் ஈடு­ப­டா­தீர்கள் வெள்ளைக் கொடியை ஏந்­துங்கள். பேய்­களை பலம் பெறச் செய்­யா­தீர்கள் என்ற கூற்றை ஆழ்ந்து செவி­ம­டுக்­கும்­போது, அர­சாங்­கத்­துடன், இணைந்து செல்­லுங்கள், அர­சாங்கம் தரு­வதை ஏற்­றுக்­கொண்டு அமை­தி­ய­டை­யுங்கள். இல்­லையேல் விப­ரீ­தங்கள் ஏற்­ப­டலாம் என்ற எச்­ச­ரிக்கை தொனியின் சாயலை உணர முடி­கின்­றது.

தீர்வை நோக்கி நகரச் செய்யும் போராட்ட வடிவம் அவ­சியம்

யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற கறுப்­புக்­கொடி ஆர்ப்­பாட்­டத்தில் வன்­மு­றைகள் இருக்­க­வில்லை. அசம்­பா­வி­தங்கள் எதுவும் அங்கு இடம்­பெ­ற­வில்லை. அர­சியல் கைதி­களை விடு­தலை செய்ய வேண்டும் என்ற கோரிக்­கையை அழுத்தி உரைக்கும் வகை­யிலும், அதன் அழுத்­தத்தை உணர்ந்து அவர்­களை விடு­தலை செய்ய ஜனா­தி­ப­தியைத் தூண்டும் வகை­யிலும் அந்தப் போராட்டம் கார­சா­ர­மாக அமைந்­தி­ருந்­தது.

ஆனால் அந்தப் போராட்டம் அந்த இலக்கை எட்­ட­வில்லை. மாறாக அந்தப் போராட்­டத்தை தூசு தட்­டி­யதைப் போன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தட்­டிச்­சென்­றுள்ளார் என்றே கருத வேண்­டி­யி­ருக்­கின்­றது. இந்தப் போராட்டத்தின் போது ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த விழாவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு புறக்கணித்திருந்தது. அந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்குப் பலம் சேர்க்கும் வகையில் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் பாளுமன்றத்தில் கொண்டு வந்த ஒத்திவைப்புப் பிரேரணைக்கு அரச தரப்பிடமிருந்து கிடைத்த எதிர் உணர்வும், ஜனாதிபதியைப் போலவே அரசாங்கமும் இந்தப் பிரச்சினையைத் தூசு தட்டும் விடயமாகவே கருதியிருப்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது.

இருந்த போதிலும், அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதிலும், அதற்கு போராட்டங்கள் அவசியமானவை என்பதிலும் இரண்டு கருத்துக்கு இடமில்லை. ஆனால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் அந்த மக்கள் எதிர்பார்க்கின்ற அளவில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதென்பது, ஆட்சியாளர்களின் அரசியல் இருப்பை ஆட்டம் காணச் செய்கின்ற ஒரு விடயமாகவே நோக்கப்படுகின்றது.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் தமிழ் மக்களுடைய ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், ஐக்கியம், ஒற்றுமை, அரசியல், பொருளாதார முன்னேற்றம் என்பவற்றுக்கு அடிப்படையானவை என்பதை அரச தரப்பினர் இன்னும் சரியான முறையில் உணரவில்லை என்பதே அரசியல் யதார்த்தமாகும்.

செயல்வலு மிக்க அரசியல் தலைமையும், ஒருங்கிணைந்த – சீராக ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டச் செயற்பாடுகளும், தமிழ் மக்களின் அரசியல் ஒற்றுமையும் அவசியம் என்பது இப்போது உணரப்பட்டிருக்கின்றது. அதேவேளை, வழமையான போராட்ட வடிவங்களிலும் பார்க்க, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுகின்ற புள்ளியை நோக்கி அரசாங்கத்தை நகரச் செய்கின்ற வகையிலான போராட்ட வடிவங்கள் குறித்தும் உணர வேண்டிய தருணம் இது என்பதும் உணரப்பட வேண்டும்.

Leave a comment