அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு நாள் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக 17 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது.
மேலும் நாட்டின் ரயில்வே திணைக்களம் வருடாந்தம் 6000 மில்லியன் ரூபா நட்டத்தில் இயங்கி கொண்டிருக்கின்றது. இதன்படி தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் கோரிக்கை அநீதியானது. ஆகையால்
ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த கூடாது என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மோட்டார் வாகனச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்.
சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி ரயில்வே தொழிற்சங்கம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட போவதாக அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தினை ரயில்வே பொறியியல் சாரதிகள், பொறுப்பதிகாரிகள் ஒன்றிணைந்த தொழிறசங்கமே போராட்டத்தில் ஈடுப்படுவதற்கு முடிவெடுத்துள்ளது.
சம்பள கட்டமைப்பின் எம்.பி 1 மற்றும் 2 கட்டமைப்பில் திருத்தம் செய்து சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கையாகும். இதன்படி அமைச்சின் செயலாளருடன் பேசியதுடன் பிரதமரின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்படி பிரதமரின் செயலாளர் கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்து, சம்பள மற்றம் கார்டர் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பினாலும் அந்த கடிதத்தை ஆணைக்குழு நிராகரித்தது.
ஏனெனில் குறித்த சம்பள அதிகரிப்பை ரயில் வே திணைக்கள ஊழியர்களுக்கு வழங்கினால் சுகாதார ஊழியர்களும் மறுதினம் வேலைநிறுத்த போராட்டத்தில் குதிப்பர். ஆகையால் இதனை எம்மால் செயற்படுத்த முடியாது என கூறியுள்ளனர்.
ஆகவே தொழிற்சங்ககளின் கோரிக்கை அநீதியாகும். அத்துடன் இது தொழிற்சங்கங்களுக்கிடையிலான போராட்டமாகும். இதனால் பாதிக்கப்பட போவது மக்களேயாகும். எனவே நாட்டு மக்களை மதித்து செயற்பட வேண்டும். மக்களுக்கான சேவைக்கு எந்தவொரு பாதிப்பு ஏற்பட கூடாது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு நாள் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக 17 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது. அத்துடன் ரயில்வே திணைக்களம் வருடாந்தம் 6000 மில்லியன் ரூபா நட்டத்தில் இயங்கி கொண்டிருக்கின்றது. எனவே தொழிற்சங்கங்கள் ரயில்வே வேலைநிறுத்தம் செய்து மக்களுக்கான சேவையை முடக்க கூடாது. ஊழியர்களின் கோரிக்கை அநீதியாகும். ஆகையால் ரயில்வே வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த கூடாது.
மக்களுக்கு சேவையை தொடர்ந்து பாதிப்புற செய்தால் மக்களுக்கே சட்டத்தை கையில் எடுக்க நேரிடும். அப்படியாயின் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றார்.

