ஊழியர்கள்- பொதுமக்கள் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும்: இல.கணேசன் எம்.பி.

282 0

அனைத்து பஸ் நிலையங்களையும் முறையாக பராமரித்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என இல.கணேசன் எம்.பி. கூறியுள்ளார்.

திருச்சியில் இன்று பா.ஜனதா எம்.பி. இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகை மாவட்டம் பொறையாறில் இன்று அதிகாலை அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்டிடம் இடிந்து விழுந்ததில் பணியை முடித்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்த ஊழியர்கள் 8 பேர் பலியாகியுள்ளனர்.

இது போன்ற விபத்துக்கள் வருங்காலங்களில் நடக்காத வண்ணம் தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் நிலைய கட்டிடம் மட்டுமல்லாது தமிழகத்தில் அரசு பஸ்களின் நிலையும் மிகவும் மோசமாக உள்ளது.

எனவே அனைத்து பஸ் நிலையங்களையும் முறையாக பராமரித்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு அனைத்து அரசு பஸ்களின் தரத்தையும் மேம்படுத்தி பயணிகளுக்கு பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் தமிழக அரசு மேலும் தீவிரமாக ஈடுபட வேண்டும். ஒப்பீட்டு அளவில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அனைத்து மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் அமைய வேண்டும்.

தமிழக அரசு இடத்தை தேர்வு செய்து மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு அந்த இடத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை அமைக்கும்.இவ்வாறு இல.கணேசன் எம்.பி. கூறினார். பேட்டியின் போது மாவட்ட தலைவர் தங்க ராஜைய்யன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a comment