மு.க.ஸ்டாலின் மீண்டும் எழுச்சி பயணம்!

501 16

உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர இருப்பதால் “நமக்கு நாமே” பயணம் பாணியில் மீண்டும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்த போது “நமக்கு நாமே” சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

மொத்தம் உள்ள 234 தொகுதி மக்களையும் சந்தித்துப் பேசும் வகையில் அந்த சுற்றுப்பயணம் அமைந்தது.அனைத்துத் தரப்பு மக்களையும் ஓரிடத்தில் திரளச் செய்து அவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசினார். அதோடு மக்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார்.

வழக்கமான தேர்தல் பிரசாரம் தவிர, பொது மக்களையும் சந்தித்து கலந்துரையாடியதால் “நமக்கு நாமே” பயணம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இந்த பயணத்தின்போது காலையில் நடைபயிற்சியின் போதும் மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்து பேசி கவர்ந்தார்.

மேலும் நமக்கு நாமே பயணத்தின் போது அவர் பல இடங்களில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தார். வயல்வெளிகளுக்கும் சென்று மக்களை சந்தித்தார். தி.மு.க.வின் அதிக தொகுதி வெற்றிக்கு இந்த பயணம் கைக் கொடுத்ததாக கருதப்படுகிறது.

தற்போத உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர இருப்பதால் “நமக்கு நாமே” பயணம் பாணியில் மீண்டும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இந்த சுற்றுப்பயணத்துக்கு “எழுச்சி யாத்திரை” என்று பெயர் சூட்டப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

வருகிற 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மு.க.ஸ்டாலின் தொடங்க உள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இதற்கான தொடக்க விழா நடைபெற உள்ளது.

அங்கிருந்து தொடங்கும் “எழுச்சி யாத்திரை” அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல உள்ளது. மொத்தம் 180 நாட்கள் இந்த யாத்திரை நடைபெறும். “நமக்கு நாமே” சுற்றுப்பயணம் பாணியில் மு.க.ஸ்டாலினின் பயணம் அமையும். இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. நிர்வாகிகள் இப்போதே செய்யத் தொடங்கியுள்ளனர்.

Leave a comment