டெங்கு விழிப்புணர்வு செய்யாத தனியார் பள்ளிக்கு நோட்டீசு: அமைச்சர் விஜயபாஸ்கர்

327 0

திருவண்ணாமலையில் டெங்கு காய்ச்சல் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாத தனியார் பள்ளிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவின்பேரில் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு உள்பட வைரஸ் காய்ச்சலுக்கு கைக்குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் இறந்துள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் 400-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு இறந்துள்ளதாகவும் தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

இந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திருவண்ணாமலையில் டெங்கு தடுப்பு பணிகளை அதிரடியாக இன்று ஆய்வு செய்தார். அருணாசலேஸ்வரர் கோவில் ராஜ கோபுரம் அருகே டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாமை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

பிறகு அதே பகுதியில், நிலவேம்பு குடிநீரை நகராட்சியின் 39 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கும் நேரில் சென்று வழங்குவதற்கான 39 சைக்கிள் கொண்ட விழிப்புணர்வு பேரணியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, வேங்கிக்கால் செல்வாநகரில் வீடு, வீடாக சென்று அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது, குடிநீர் தொட்டி மற்றும் உரல்களில் தண்ணீர் தேங்கவிடாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த பிறகு வீடு திரும்பிய அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சந்தியாவிடம், அமைச்சர் விஜயபாஸ்கர் உடல் நலம் விசாரித்து, டெங்கு குறித்து அந்த மாணவி கற்றுக்கொண்ட விழிப்புணர்வை கேட்டறிந்தார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் 2 பேரை அமைச்சர் அழைத்து, டெங்கு காய்ச்சல் குறித்து கேட்டார். அதற்கு மாணவர்கள் பதில் அளிக்கவில்லை. உங்கள் பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா? என்று அமைச்சர் விசாரித்தார்.

அதற்கு மாணவர்கள், டெங்கு காய்ச்சல் குறித்து எங்கள் பள்ளி நிர்வாகம் எந்த விழிப்புணர்வையும் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுத்தவில்லை என்று புகார் கூறினர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட அந்த பள்ளியிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப அமைச்சர் உத்தரவிட்டார்.

கலெக்டர் கந்தசாமி, உடனடியாக தனியார் பள்ளிக்கு நோட்டீசு அனுப்பினார். இதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.

காய்ச்சலால் எவ்வளவு பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? போதிய மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளதா? என்று ஆய்வு செய்தார்.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தின சாமி, எம்.எல்.ஏ.க்கள் பன்னீர் செல்வம், தூசிமோகன், திட்ட அலுவலர் லோக நாயகி, நகராட்சி கமி‌ஷனர் பாரிஜாதம், முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ண மூர்த்தி, ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் பெருமாள் நகர ராஜன் உள்பட பலர் உடன் சென்றனர்.

Leave a comment