மு.க.ஸ்டாலினுடன் பொது அரங்கில் விவாதிக்க தயார்: அன்புமணி ராமதாஸ்

213 0

விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தது தி.மு.க. தான் என்றும், மு.க.ஸ்டாலினுடன் பொது அரங்கில் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரிப் பிரச்சினையில் தி.மு.க. செய்த துரோகங்களை பட்டியலிட்டு, இவற்றுக்கு எல்லாம் காரணமான தி.மு.க., விவசாயிகளின் உரிமைகளுக்காக போராடுவதாகக் கூறுவது நாடகம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும், நானும் குற்றம் சாட்டியிருந்தோம். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், “உறங்குவது போல நடிப்பவர்களுக்கு சில உண்மை நிலவரங்கள்” என்ற தலைப்பில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உண்மை எப்போதும் சுடும், குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். தி.மு.க. மீது பா.ம.க. கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பதால் தான் ஸ்டாலின் கடந்த ஆண்டு கருணாநிதி வெளியிட்ட அறிக்கையின் முன்னும் பின்னும் சில பத்திகளைச் சேர்த்து அவசரம், அவசரமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் கூறுவதைப் போன்று, தி.மு.க. அளிக்கும் விளக்கத்தை ஏற்க மறுத்து உறங்குவதைப் போல யாரும் நடிக்கவில்லை. தி.மு.க. அளித்த விளக்கங்கள் உண்மையானதாகவும், நியாயமானதாகவும் இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் எங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தூங்குவதாக நினைத்துக் கொண்டு, பொய்களைக் கூறி உண்மையை மறைத்து விடலாம் என ஸ்டாலின் நினைப்பதால் தான் உண்மையை நினைவூட்ட வேண்டியிருக்கிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு 5-2-2007 அன்று வெளியான போது தமிழகத்தை தி.மு.க. தான் ஆட்சி செய்தது. மத்திய அரசிலும் தி.மு.க. தான் முதன்மை பங்குதாரராக இருந்தது. தீர்ப்புக்கு பிறகு 4½ ஆண்டுகள் மாநிலத்திலும், 6½ ஆண்டுகள் மத்தியிலும் அதிகாரத்தில் இருந்த தி.மு.க. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என்பது தானே உண்மை.

ஆட்சியில் இருந்த போது எதையும் செய்யாமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன்; பேச்சு வார்த்தை நடத்தினேன் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன பயன்?. அதைத் தானே இப்போதுள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் செய்து கொண்டிருக்கிறது. அப்படியானால், எடப்பாடி பழனிசாமி அரசும், தி.மு.க. அரசும் ஒன்று தான் என ஒப்புக் கொள்ள ஸ்டாலின் தயாரா?.

மீத்தேன் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆய்வுக்காக மட்டும் செய்து கொள்ளப்பட்டது என்று ஸ்டாலின் அளிக்கும் விளக்கம் குழந்தைத் தனமானது அல்லவா?. மீத்தேன் திட்டத்தைப் போன்று தான் நெடுவாசல் திட்டத்திற்கும் ஆய்வுக்கான உரிமத்தை தி.மு.க. அரசு வழங்கியது. இந்த இரு திட்டங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடாவிட்டால் அத்திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகியிருக்கும் என்பதை ஸ்டாலின் மறுக்க முடியுமா?. விவசாயிகளுக்கு தி.மு.க. செய்த துரோகங்களை முழுமையாக பட்டியலிட பக்கங்கள் தான் போதாது.

இதன்பிறகாவது, விவசாயிகளுக்கு தி.மு.க. இழைத்த துரோகங்களை மு.க.ஸ்டாலின் ஒப்புக்கொள்வார் என்று நம்புகிறேன். ஒருவேளை இந்த விளக்கங்களை ஏற்க மு.க.ஸ்டாலின் மறுத்தால், இவை குறித்து அவருடன் பொது அரங்கில் விவாதம் நடத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன். மு.க.ஸ்டாலின் அத்தகைய விவாதத்தில் பங்கேற்க தயாரா? என்பதை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.