நிபந்தனைகளை நிறைவேற்றினால் தான் பேச்சுவார்த்தை நடக்கும்: கே.பாண்டியராஜன்

212 0

எங்கள் நிபந்தனைகளை நிறைவேற்றினால் தான் இரு அணிகள் இடையே பேச்சுவார்த்தை நடக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.

அ.தி.மு.க.வில் சில கருத்து வேறுபாடு காரணமாக அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா), அ.தி.மு.க. (அம்மா) என 2 அணிகளாக பிரிந்து உள்ளன. இந்த 2 அணிகளும் ஒன்று சேர இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டது. இதற்காக பேச்சுவார்த்தை நடத்த குழுவும் அமைக்கப்பட்டது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியை சேர்ந்தவர்கள், சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் நிபந்தனைகளை விதித்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் அ.தி.மு.க. (அம்மா) அணி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டன. இதுகுறித்து அ.தி.மு.க. (அம்மா) அணியினரிடம், ‘ஓ.பன்னீர்செல்வம் அணியின் கோரிக்கையை ஏற்று தான் சசிகலாவின் பேனர்களை அகற்றினீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள், ‘அது எங்களுடைய சொந்த முடிவு’ என்று தெரிவித்தனர்.

கடந்த 3 நாட்களாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும், மாவட்ட செயலாளர்கள் உள்பட நிர்வாகிகளிடம் பிரமாண பத்திரம் பெறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. அதில், சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் கட்சி பதவி வகிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக நீடிப்பதற்கும் உறுதுணையாக இருப்போம் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதிருப்தியில் இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.

இதற்கிடையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியினர் நேற்று ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனை முடிவில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறுகையில், ‘பேச்சுவார்த்தைக்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். நாங்கள் சில நிபந்தனைகளை வைத்து இருக்கிறோம். அதை நிறைவேற்றினால் தான் பேச்சுவார்த்தை நடக்கும். இதுதொடர்பாக நாளை (இன்று) எங்கள் அணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் கே.பி.முனுசாமி விளக்கமாக தெரிவிப்பார்’ என்றார்.