ரவூப் ஹக்கீம் மன்னார் – முசலி பிரதேசத்தில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களினால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்

245 0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மன்னார் – முசலி பிரதேசத்தில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களினால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார். மன்னார் – முசலி – மறிச்சுக்கட்டி கிராமம் உட்பட குடியிருப்பு காணிகளை வில்பத்து சரணாலயத்திற்குள் உள்ளடக்கி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச்செய்யுமாறு கோரி மறிச்சுக்கட்டி கிராம மக்கள் 32 ஆவது நாளாக இன்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னார் – முசலி பிரதேசத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வில்பத்து காணி பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

இந்த கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஆதரவாளர்களுக்கும், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.மொஹமட் நவவி கூட்டத்தில் இருந்து திடீரென வெளியேறினார்.

இந்த சலசலப்பை அடுத்து குறித்த கூட்டம் முடிவிற்கு வந்தது. கூட்டம் நிறைவடைந்த நிலையில் நிலமீட்பு போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு சென்ற அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான குழுவினரை போராட்ட இடத்திற்குள் பிரவேசிக்க வேண்டாம் என போராட்டக்காரர்கள் கூச்சலிட்டனர்.

இந்த நிலையில் அந்த இடத்தை விட்டு அமைச்சர் தலைமையிலான குழுவினர் வெளியேறிச் சென்றனர்.