முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது(காணொளி)

280 0

முல்லைத்தீவு – கொக்குளாயில் மீன்பிடிப்பதற்கான கரைவலைப்பாடுகள் அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் நேற்று முறுகல் நிலை ஏற்பட்டது.

கரைவலைப்பாடுகள் அளவீட்டுப் பணிகளில், கிளிநொச்சி நில அளவைத் திணைக்களத்தினர் மாத்திரமே தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியிலுள்ள மீன்பிடிப்பதற்கான கரைவலைப்பாடு 1980ஆம் ஆண்டின் பின்னர், தமிழ் மீனவர்கள் வசமே காணப்பட்டது.

குறித்த பகுதியில் 10 கரைவலைப்பாடு பிரிவுகள் இருப்பதாகவும் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தப் பகுதியிலுள்ள கரைவலைப்பாடு பிரிவுகளில் பெரும்பாலானவை தமிழர் வசமே இருந்ததாகவும் தமிழ் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் 80 ஆண்டு காலப்பகுதியில் சிங்களவர்களுக்கு உரிமையாக இருந்த ஒரிரண்டு கரைவலைப்பாடுகளை தமிழர்களுக்கு விற்றுவிட்டு சிங்கள மீனவர்கள் சென்றதாகவும் தமிழ் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் கொக்குளாய் பகுதியில் பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்த தமிழ் மீனவர்கள் இடம்பெயர்ந்ததை அடுத்து, தமிழர்களின் கரைவலைப்பாடுகளை நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்துவந்த சிங்கள மீனவர்கள், ஆக்கிரமித்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீள்குடியேற்றத்தின் பின்னர் தமக்கான கரைவலைப்பாடு உரிமையைப் பெற்றுத் தருமாறு கோரி, தமிழ் மீனவர்கள் முன்வைத்த கோரிக்கை அதிகாரிகள் மட்டத்தில் தீர்வுகள் வழங்கப்படாத நிலையில், இதுதொடர்பான விடயம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டிருந்தது.

இறுதியாக நடைபெற்ற வழக்கு விசாரரணையின் போது, முன்னர் நில அளவைத் திணைக்களம் மேற்கொண்ட அளவீட்டுப் பணிகள் தொடர்பில் தமது எதிர்ப்பை வெளியிட்ட நீரியல் வளத் திணைக்களம், அந்த அளவீட்டுப் பணிகள் தமது மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கடற்தொழிற் நீரியல்வளத் திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர், அப்பகுதிக்குரிய கிராம உத்தியோகத்தர் மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் இடையில் மீண்டும் அளவீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதனை அடுத்து நேற்றைய தினம் அளவீட்டுப் பணிகளுக்காக அனைத்து தரப்பினரும் பிரசன்னமாகியிருந்தனர்.

தலைப்பாடு என்ற பகுதியில் இருந்தே அளவீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மீனவர்கள் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

இதனை ஏற்கமறுத்த கொழும்பில் இருந்து வந்த நீரியல்வளத் திணைக்கள உத்தியோகத்தர்கள், 300 மீற்றருக்கும் அதிகமான தூரத்திற்கு அப்பால் இருந்து அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதுடன், தமிழ் மீனவர்கள் மற்றும் பிரதேச அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த அளவீட்டு பணிகள் நியாயமான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்து, பிரதேச செயலக அதிகாரிகள் அளவீட்டு பணிகளில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பிரதேச செயலக அதிகாரிகள் இல்லாத நிலையிலும், கிளிநொச்சி நில அளவைத் திணைக்களம், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் அளவீட்டுப் பணிகள் தொடந்தும் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், அளவீட்டு பணிகள் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.